சென்னையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ஸ்டாலின்

First Published Apr 5, 2018, 10:38 AM IST
Highlights
opposition parties protest in chennai and stalin arrested


சென்னை மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் சார்பிலும் அமைக்க கூடாது என கர்நாடக சார்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசும் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வரும் 9ம் தேதி விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வணிகர் சங்கங்கள், சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையே ஸ்தம்பித்தது. சென்னையின் முக்கிய சாலையை முடக்கியதால் போக்குவரத்து முடங்கியது. இந்த மறியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் போலீசாரின் தடையை மீறி பேரணியாக சென்றவர்கள், மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர்.

click me!