
கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் தெளிவான விவரங்களே கிடையாது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர்களிடமும் ஓபிஎஸ்-சிடமும் விசாரணை நடத்தப்பட்ட வேண்டும். உண்மை வெளிவர வேண்டுமானால் சிபிஐ விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். கடந்த முறை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆர்.கே.நகர் தொகுதியை தத்தெடுத்து இனிமேல், அனைத்துவிதமான நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இதுவரை ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டனர் என விமர்சித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஓகி புயலால் எத்தனை மீனவர்கள் இறந்துள்ளனர், எத்தனை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர், எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான தெளிவான விவரங்கள் எதுவுமே கிடையாது. இதிலிருந்து இன்னும் கணக்கெடுப்பு பணிகள் கூட ஒழுங்காக நடைபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என முதல்வரை ஸ்டாலின் விமர்சித்தார்.