‘கொஞ்சமாவது விஸ்வாசம் இருக்கணும்’... பேரவையில் நாராயணசாமியுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 22, 2021, 11:28 AM IST
Highlights

அப்போது ஆத்திரமடைந்த நாராயணசாமி தரப்பு எம்.எல்.ஏ., முதலமைச்சர் பேசும் போது தலையிட்டால் நாங்கள் அனைவரும் பேசுவோம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விடிய, விடிய பேசுவோம் என ஆவேசமாக பதிலளித்தார். 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் முதலில் 14 ஆக இருந்த நாராயணசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு 4,  பாஜகவுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


தற்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரி முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் இழுத்தடித்தார் என்றும், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, உங்களை மாதிரி தானே நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டோம் எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?... யாரும் நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விட முடியாது. யாரும் பச்சோந்தியாக இருக்க கூடாது. கொள்கை பிடிப்போடு, நாம் சார்ந்திருக்கும்  இயக்கத்திற்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். 

மத்திய அரசால் புதுச்சேரி அரசு பாதிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி பேச ஆரம்பித்தார், அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ, மத்திய அரசு மூலம் புதுச்சேரி அரசு புறக்கணிக்கப்பட்டதாக பேசுவதை நாங்கள் தடுக்கவில்லை, ஆனால் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி இங்க பேசுவதற்கு என்ன தேவை இருக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஆத்திரமடைந்த நாராயணசாமி தரப்பு எம்.எல்.ஏ., முதலமைச்சர் பேசும் போது தலையிட்டால் நாங்கள் அனைவரும் பேசுவோம், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விடிய, விடிய பேசுவோம் என ஆவேசமாக பதிலளித்தார். அதற்கு எதிர் தரப்பில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் இவருக்கு துணை நிலை ஆளுநர் சொன்னது தெரியாது போலயே 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக்கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. இரு தரப்பினரையும் அவைத்தலைவர் சமாதானம் செய்து வைத்தார். 

click me!