என்ன செய்யப் போகிறார்கள்: ராகுல் காந்தி்க்கு காங்கிரஸ் கட்சிக்குள் கிளம்பும் திடீர் எதிர்ப்பு

By Selvanayagam PFirst Published Oct 10, 2019, 7:25 AM IST
Highlights

வெளிநாடு பயணம் புறப்பட்டது, தலைவர் பதவியை ராஜினாமா செய்தது, தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தி திடீரென எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
 

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட 2-வது முறையாகப் பெறமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டு 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று, ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்காத மூத்த தலைவர்கள் அவரைப் பதவியில் தொடர வலியுறுத்தினார்கள். ஆனால், பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாவை செய்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து, இடைக் காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் கட்சிக்குள் ஒருவிதமான குழப்பமான சூழல் தென்பட்டது, ஏராளமான தலைவர்கள், மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்வதும், மற்ற கட்சிகளில் இணைவதுமான சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் நிலை குறித்து மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ராகுல் காந்தியை வெளிப்படையாக முதல்முறையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் தோல்வி ஏற்பட்டது என்று அனைவரும் ஒன்றாகக் கூடி ஆலோசிக்கக் கூட எங்களால் முடியவில்லை.

இப்போது எங்கள் முன் இருக்கும் முக்கியமான, மிகப்பெரிய பிரச்சினையே, தோல்வியை எதிர்கொள்ளாமல் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து பொறுப்பற்ற முறையில் விலகிச் சென்றதுதான். தலைவர் பதவியைத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் கேட்டுக்கொண்டும் அவர் அதைப் புறக்கணித்துவிட்டார்.

ராகுல் காந்தியின் ராஜினாமாவால், கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. இதைச் சரிகட்ட சோனியா காந்தி தற்காலிக தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இதை தற்காலிக ஏற்பாடாகவே பார்க்க முடியும்.

அனைத்தையும் கட்சியிடம் இருந்து பெறும் நபர்களைப் போல் நாங்கள் அல்ல. கட்சியில் சின்ன தோல்வி ஏற்பட்டால்கூட உடனே வெளியேறும் நபர்கள் நாங்கள் அல்ல. பொறுப்பற்ற முறையில் விலகிச் செல்லும் மனிதர்களைப் போலும் நாங்கள் அல்ல’ என்று தெரிவித்தார்

அதாவது ராகுல் காந்தியின் செயலை பொறுப்பற்றது என்றும், பிரச்சினைகளைக் கண்டால் பயந்து பின்வாங்கும் செயல் என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார்.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் ராகுல்காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “ஒரு விஷயம் மிகவும் தெளிவாகப் புரிகிறது. காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை,’’ எனத் தெரிவித்தார்

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தியின் செயலுக்கு எதிர்ப்பு உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி தற்போது இக்கட்டான சூழலில் இருக்கிறது.  தேர்தல் தோல்வி்க்குப்பின் ஏராளமான தலைவர்கள், ராகுல் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து விலகி, பாஜகவிலும், மற்ற கட்சிகளிலும் சேர்ந்து வருகின்றனர். இதற்கிடையே கடுமையான உட்கட்சி பூசல் போன்றவற்றால் மாநிலத்துக்கு மாநிலம் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது.

தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வர், மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடாவுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மகாராஷ்ராவில் உச்சக்கட்ட குழப்பத்தால், ராகுலுக்கு நெருக்கமான சஞ்சய் நிருபம் கட்சியை வி்ட்டு விலகினார். இதுபோல் ஏராளமானோர் கடந்த காலங்களில் விலகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் எல்லாம் மூத்த தலைவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள் என்பது ராகுல் காந்தியின் ஆதங்கமாக இருந்து வருகிறது. வரும் ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தாமாக தோற்றபின் தோல்விக்கு பொறுப்பு ஏற்கக் கோரி மூத்த தலைவர்களை காலி செய்து இளைஞர்களை பதவியில் அமர்த்தவும் ராகுல் திட்டமி்ட்டுள்ளார் என  அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், தொடரும் குழப்பங்களால் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது என்பது புதிராக இருக்கிறது
 

click me!