ஓ.பி.ரவீந்திரநாத், அன்புமணிக்கு ஏன் கிடைக்கவில்லை... மத்திய அமைச்சர் பதவி எல்.முருகனுக்குகிடைத்தது எப்படி..?

By Thiraviaraj RMFirst Published Jul 8, 2021, 10:11 AM IST
Highlights

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் தோல்வி அடைந்ததும், அவரை மூக்கறுப்பு செய்யும் வகையில், கயல்விழிக்கு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், இந்திய வரலாற்றிலேயே, 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்து, 43 புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 

பிரதமர் மோடி தலைமையில், மிகவும் ரகசியமாக மத்திய அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில், தமிழக பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் டெல்லி சென்று, தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அழைத்து சென்ற, தமிழக பா.ஜ.க., தலைவர் முருகன், டெல்லியில் தான் முகாமிட்டு இருந்தார்.

அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி, அவருக்கு நேற்று மாலை வரை தெரிவிக்கப்பட வில்லை. டெல்லியில் இருக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதால், முருகன் அங்கு தங்கி இருந்தார். அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை அல்லது ரவீந்திரநாத் ஆகியோருக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரில் ஒருவருக்கு பதவி வழங்கினால், மற்றவருக்கு அதிருப்தி ஏற்படக்கூடும் என்பதால், அக்கட்சிக்கு இடம் அளிக்கவில்லை.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என தி.மு.க., பேசி வருவதை கண்டித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டும், அவரது மகன் ரவீந்திரநாத்தை, பா.ஜ.க., மேலிடம் கண்டுகொள்ளவில்லை. பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, இணை அமைச்சர் பதவி தருவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் காங்கிரஸ் அமைச்சரவையில், கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்பதால், அவருக்கும் வழங்கவில்லை.

த.மா.கா., தலைவர் வாசனை, மக்களவை தேர்தலுக்கு முன், தன்னை வீட்டில் வந்து சந்திக்கும் படி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அன்று அழைப்பை ஏற்று, த.மா.கா.,வை பா.ஜ.க.,வில் இணைத்திருந்தால், வாசனுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும். தமிழக பா.ஜ.க, தலைவர் முருகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்கு, தி.மு.க.,வுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதாவது, தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் தோல்வி அடைந்ததும், அவரை மூக்கறுப்பு செய்யும் வகையில், கயல்விழிக்கு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க.,வுக்கு பதிலடி தரும் வகையில், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

click me!