தேனி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகனுமான ரவீந்திரநாத் குமாருக்கு கூட்டணி தர்மப்படி மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ஓபிஎஸ் அவருக்கு கப்பல் போக்குவரத்துறையை கேட்டு கன்பாஃர்ம் பண்ணியுள்ளதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அதிரடியாக வெற்றி பெற்றபோதும், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திநாத் குமார், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிந்தவுடன் காசிக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து. தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை உறுதி செய்ததாகவம் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் பாஜக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளதால் கூட்டணி தர்மப்படி அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்க்கிறார்.
அதிமுக பல இடங்களில் ஜெயித்திருந்தால் ஒருவேளை மத்திய அமைச்சர் பதவிக்கு போட்டி இருந்திருக்கும். ஆனால் தற்போது ரவீந்திரநாத் குமார் சிங்கிளாக ஜெயித்திருப்பதால் மத்திய அமைச்சர் பதவி உறுதி என்கின்றனர்.
இந்நிலையில் ரவீந்திரநாத் குமாருக்கு கப்பல் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அமைச்சரவையில் ஓபி.ரவீந்திநாத் குமாருக்கு இடம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.