
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிலிண்டர் விலையைக் குறைக்கும் அந்த இடத்துக்கு நாம் வந்துவிடுவோம் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. திமுகவில், மகளிரிணி செயலாளர் கனிமொழிக்கு விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தது அக்கட்சி தலைமை. பிரசாரத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசின் சாதனைகள், முந்தையை திமுக ஆட்சியில் கருணாநிதியின் சாதனைகள் போன்றவற்றையும் உள்ளூர் பிரச்சினையையும் கனிமொழி பேசி வாக்கு சேகரித்தார். ஆனாலும், பிரசாரத்தைக் காண வந்த பெண்கள் பலரும், ‘‘காஸ் சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீர்கள்?’ என்ற கேள்வியைத்தான் முக்கியமாக முன் வைத்தார்கள்.
இந்தக் கேள்வியை கனிமொழி பிரசாரம் செய்த எல்லா பாயிண்டுகளிலும் பெண் வாக்காளர்கள் முன் வைத்தனர். இதைக் கேட்டு கனிமொழி ஜெர்க் ஆகவே செய்தார். என்றாலும் இந்தக் கேள்விகளுக்கு எல்லா இடங்களிலும் கனிமொழி பதில் அளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அப்படி தூத்துக்குடியில் கனிமொழி பிரசாரம் செய்தபோது அளித்தபோது, “சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று சகோதரிகள் கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பால் விலையைக் குறைப்பேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றினார். நகரப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணம் கிடையாது என்று ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். இந்த இரண்டும் நம் கையில் இருந்தது, அதனால் செய்ய முடிந்தது.
ஆனால், சிலிண்டர் விலையைக் குறைப்பது நம் கையில் இல்லை. அது, ஒன்றிய மோடி அரசின் கையில் உள்ளது. பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏற்றுவது பாஜக அரசுதான். சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் தவிக்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் எத்தனையோ முறை திமுக உறுப்பினர்கள் வாதாடியிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். சிலிண்டர் விலையைக் குறைக்கும் அதிகாரம் மோடி அரசின் கையில் உள்ளதால், இங்கு வாக்கு கேட்டு வரும் பாஜகவினரிடம் இதைப் பற்றி கேளுங்கள். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவினரிடமும் கேளுங்கள்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சிலிண்டர் விலையைக் குறைக்கும் அந்த இடத்துக்கு நாம் வந்துவிடுவோம். அப்போது சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்ற அந்த உறுதியை நான் வழங்குகிறேன். அதுவரை நாடாளுமன்றத்தில் உங்களுக்காகக் குரல் கொடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். என்று கனிமொழி தெரிவித்தார். பிரசாரம் செய்த எல்லா இடங்களிலும் கனிமொழி இதைக் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.