அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை... பகீர் கிளப்பும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Oct 20, 2020, 5:41 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டம்  என்பது புதைமணலை விட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது. இதற்கு ஆயிரமாயிரம்  உதாரணங்களைக் கூற முடியும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

ஆன்லைன் சூதாட்டம்  என்பது புதைமணலை விட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது. இதற்கு ஆயிரமாயிரம்  உதாரணங்களைக் கூற முடியும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக் கூட வாழத் தொடங்காத அவனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.

புதுச்சேரி மாநிலம் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில், கடன் வாங்கியும், தமது சொத்துகளை அடகு வைத்தும், வங்கி சேமிப்புகளை கரைத்தும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். அனைத்தையும் இழந்த நிலையில், வாழ்வதற்கு வழி தெரியாத சூழலில் மனைவியையும், கைக்குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு விட்டு, நேற்று முன்நாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கான காரணம் குறித்து மனைவிக்கு அனுப்பிய ஒலிச் செய்தியில், சூதாட்டத்திற்கு அடிமையாகி 30 லட்சத்துக்கும் கூடுதலான பணத்தை இழந்தது தான் காரணம் என்றும், தமது தற்கொலையையே சாட்சியாக்கி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும்படி பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தனியார் செல்பேசி நிறுவனத்தின் பணியாற்றிய அந்த இளைஞர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்; சொத்துகளை ஈட்டியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியுள்ளார்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் சூதாட்டத்தை ஆடத் தொடங்கிய அந்த இளைஞர், தொடக்கத்தில் லட்சக்கணக்கில் பணத்தை ஜெயித்து, அதனால் ஏற்பட்ட போதையில்  சூதாட்டத்திற்கு அடிமையாகி, தாம் ஈட்டிய அனைத்தையும் இழந்துள்ளார். இதற்கு முன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்கள் கூறிய அதே காரணங்களைத் தான் இந்த இளைஞரும் கூறியிருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் என மாநில எல்லைகளைக் கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அதில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை தடுக்க வேண்டிய அரசுகள், இவற்றை வேடிக்கைப் பார்க்கின்றன.

ஆன்லைன் சூதாட்டங்களின் ஆபத்துகள் குறித்து 4 ஆண்டுகளுக்கு முன்,  2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 6&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். அண்மையில் கூட ஜூன் 17,  ஜூலை 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன்மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும்  எடுக்காததன் விளைவாக வாழ வேண்டியவர்கள் ஆன்லைன் ரம்மியில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்; ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமை தொடர அனுமதிக்கக்கூடாது.

மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு சீரழியுமோ, அதை விட மோசமான சீரழிவுகளை, அதைவிட  குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும். மகாபாரதம் என்பது புராணக்கதையாக இருந்தாலும் கூட, அதில் சித்தரிக்கப்பட்ட சூதாட்டத்தின் தீமைகள் உண்மை. மகாபாரதத்தில் சகுனி எவ்வாறு காய்களை உருட்டி, தருமரை வீழ்த்தினாரோ, அதேபோல் தான் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் கணிணி ரோபோக்கள் செய்யும் செப்படி வித்தைகளால் அப்பாவிகள் வீழ்த்தப்படுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டம்  என்பது புதைமணலை விட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது. இதற்கு ஆயிரமாயிரம்  உதாரணங்களைக் கூற முடியும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பரிசுச்சீட்டு என்ற மோகினிப் பிசாசின் ஆட்டம் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பரிசுச் சீட்டுகளில் இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர் போராட்டங்களை நடத்தி பரிசுச்சீட்டுகளை தடை செய்ய வைத்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும். பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்து சூதாடினால் அது குற்றம் ஆகும். 

ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே... ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

click me!