டெல்டாவில் இருந்து ராமநாதபுர மாவட்டத்திற்கு மாறிய ONGC..!! தமிழக அரசு தலையிட கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 22, 2020, 10:55 AM IST
Highlights

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் ONGC நிறுவனம் சார்பாக எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இராமநாதபுரம் ஆற்றங்கரையில் நடைபெறும் ONGC பணிகளை உடனே தலையிட்டு தமிழக அரசு  தடுத்து நிறுத்தவேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  

டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி  நடைபெற்று வந்த மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் அப்பகுதியில் கடும் எதிர்ப்பை சந்தித்தன. தற்போது அப்பகுதி பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், தற்போது கடலோர மாவட்டங்களை குறிவைத்து ONGC போன்ற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் ONGC நிறுவனம் சார்பாக எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பாக எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மக்கள் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது  மீண்டும் அப்பணிகளை துவக்கியுள்ளார்கள். 

மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நிறைந்து வாழும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நீரும், நிலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளை மதித்து ONGC நிறுவனம் தனது திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். ONGC நிறுவனம் தனது பணிகளை கைவிடாவிட்டால், ஜனநாயக சக்திகளோடு இணைந்து மாபெரும் மக்கள் இயக்கங்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னெடுப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
என தெரிவித்துள்ளார். 
 

click me!