
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு ஒரு நிமிடம் லேட்டாக வந்தததற்காக மன்னிப்புக் கேட்ட அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமாசெய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக மைக்கேல் பேட்ஸ் என்பவர் பதவி வகித்துவருகிறார். மேலும் அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் அவை உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான சம உரிமை வழங்குவது குறித்த விவாதம், நேற்று நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினரான பாரோனெஸ் லிஸ்டர் என்பவரின் கேள்விக்குப் பதிலளிக்க, உரிய நேரத்தில் அமைச்சர் பேட்ஸ் வரவில்லை.
ஒரு நிமிடம் தாமதமாக வந்த பேட்ஸ், எதிர்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டியது எனது கடமை, ஆனால் நான் சற்று தாமதமாக வந்தததால் அந்த கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை என அமைச்சர் பேட்ஸ் வருத்தம் தெரிவித்தார்.
என்னுடைய கடமையை, உரிய நேரத்தில் செய்ய இயலாமல்போனதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்த அவர், இதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவ்வாறு கூறிய அவர் உடனடியாக அவையை விட்டு வெளியேறினார்.
அமைச்சரின் இந்த செயலைப் பார்த்து, எதிர்க்கட்சி உறுப்பினர் பரோனெஸ் லிஸ்டர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தாமதமாக வந்ததற்காக அவர் மன்னிப்புக் கோரினால் போதுமானது என்றும் , அவர் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் எதிர்க்கடசி உறுப்பினர் பாரோனெஸ் லிஸ்டர் தெரிவித்தார். மேலும் அமைச்சரைச் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
ஆனால் மைக்கேல் பேட்ஸின் ராஜினாமாவை பிரிட்டன் பிரதமர் தெரசா மே நிராகரித்தார்.