
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் ஏதும் போடவில்லை. இதில் அதிமுகதான் உண்மையில் இரட்டை வேடம் போடுகிறது என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருக்கா சேலம் வந்திருந்தர். சேலம் கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜவாஹிருல்லா கூறுகையில், “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் ஹிஜாப்பை தடை செய்த வரலாறு எதுவும் கிடையாது.
தற்போது வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலில் பாஜகவுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்க பாஜகவின் சூழ்ச்சியாகத்தான் இது உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் ஏதும் போடவில்லை. இதில் அதிமுகதான் உண்மையில் இரட்டை வேடம் போடுகிறது. ஏனென்றால், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், நீட் விவகாரத்தைப் பற்றி பேச அதிமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக அதிமுக மேற்கொள்கிறது. அவர்கள் அப்படிப் பொய் பிரச்சாரம் செய்தாலும் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே ரேஷன் போன்று ஒரே தேர்தல் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பதை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறார். அவருடைய பேச்சு அவரின் அடிமைத்தனத்தைத்தான் காட்டுகிறது.” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.