என்னை ஏன் முதலமைச்சரா படைச்ச ஆண்டவா? ம்ம்ம்முடியல இம்சை: எக்குதப்பாக கண்ணீர்விடும் எடப்பாடியார்

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2019, 6:01 PM IST
Highlights

பா.ம.க.வோ நான்கு மாநகராட்சிகளை கேட்கிறாங்க. அதாவது நான்கு மேயர்கள் கண்டிப்பாக வேண்டுமாம். உள்ளாட்சி பதவிகளில் மொத்தமா முப்பது சதவீதத்தை கேட்கிறாங்க டாக்டர்கள் ரெண்டு பேரும். இவங்களை சர்வசாதாரணமா தவிர்க்கவும் முடியாது. காரணம், விக்கிரவாண்டி தொகுதியில் கழக வெற்றிக்கு முக்கிய காரணம் ராமதாஸ்தான். ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொளுத்திய விமர்சன ராக்கெட்டுகள்தான் மக்களை எங்க பக்கம் திருப்பியது. 

இந்த உலகத்தில் அதிர்ஷ்டம், ஜாக்பாட், யோகம் எல்லாம் உண்மையே என்பதற்கான வாழ்நாள் உதாரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக முதலமைச்சர் எனும் மிகப்பெரிய கிரீடத்தை சர்வசாதாரணமாக இவர் தலையில் தூக்கி வைத்திருக்கிறது காலம். என்னதான் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு முன் இப்படி முதலமைச்சராக்கப் பட்டிருந்தாலும் கூட ஜெயலலிதா உயிரோடும், சசிகலா வெளியேயும் இருந்தனர் அப்போது. அதனால் முதல்வர் பதவியானது பன்னீருக்கு முள் கிரீடமாகவே இருந்தது. ஆனால் எடப்பாடியாரை தேடி முதல்வர் பதவி வந்த போது ஜெ., உயிரோடே இல்லை, சசி சிறையில் எப்படி பெட்டிப் பாம்பாக அடக்கப்பட்டிருக்கிறார்! என்பது உலகமறியும். அதனால்தான் அதிர்ஷ்டத்தை ஒட்டுமொத்தமாக லீசுக்கு எடுத்திருக்கிறார் எடப்பாடியார்! என்று பத்திரிக்கைகள் சிலாகிக்கின்றன. இப்பேர்ப்பட்ட எடப்பாடியார்தான் இப்போது ‘ஏன் என்னை முதலமைச்சராக்குன ஆண்டவா?’ என்று நொந்து நூடுல்ஸாகி வருந்துகிறாராம். 

அப்படி என்னதான் அவருக்கு வருத்தம்? என்று அ.தி.மு.க. தரப்பில் கேட்டபோது கிடைத்த விபரங்கள் இதோ....”கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல தேனியை தவிர மற்ற அத்தனை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைய காரணம், தமிழர்களுக்கு பிடிக்காத பா.ஜ.க.வுடன் கூட்டணி வெச்சதுதான்! அப்படின்னு வலுவாக சொன்னாங்க. இதனால சமீபத்தில் நடந்த இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தலைவர்களை பிரசாரத்துக்கு அதிகமா வரவிடாமல் தடுத்துட்டோம்.  எங்களுக்கு பெரிய வெற்றி கிடைச்சது தேர்தலில். அந்த வெற்றியை ‘கூட்டணிக்கு கிடைத்த வெற்றி’ன்னு திருப்பிப் போட்டுக்கிட்டாங்க பா.ஜ.க., பா.ம.க. தே.மு.தி.க. உள்ளிட்ட  எங்களின் கூட்டணி தோழர்கள். 
சரி, ஏதோ பேசிட்டு போறாங்கன்னு விட்டுட்டோம். இடைத்தேர்தலில் வென்ற இந்த நிலையில இப்போ உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட முழு மூச்சுல ரெடியாகிட்டோம். தமிழக முதல்வரும், கழகத்தின் தலைமை பீடமுமான எங்கள் எடப்பாடியார் உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை ஸ்கெட்ச்களை போட துவங்கியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் மனசு ஒடியுற மாதிரியான விஷயங்கள் நடக்குது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் எங்களை ஏதோ உப்புசப்பா நினைச்ச கூட்டணி தோழர்கள், இந்த இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் முழுமையா பழைய வியப்போட பார்க்க துவங்கிட்டாங்க. 

ஆனால் இது  நெகடீவாக போயிட்டிருக்கிறதுதான் பிரச்னையே. அதாவது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்குதுன்னு ஒரு பெரிய நம்பிக்கைக்கு வந்திருக்கிற அவங்க, உள்ளாட்சி தேர்தல்ல கன்னாபின்னான்னு தொகுதிகளை கேட்டு நச்சரிக்க துவங்கியிருக்காங்க. பா.ஜ.க.  ஐந்து மாநகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க கேட்கிறது. அதாவது ஐந்து மேயர்களாவது அவங்களுக்கு வேண்டுமாம். சென்னை, திருப்பூர், நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகியவை கண்டிப்பாக வேண்டுமாம். இது போக நகர்மன்ற தலைவர் பதவிகளும் கணிசமாக வேண்டும்னு கேட்கிறாங்க. பா.ஜ.க. கேட்பதிலாவது ஒரு நியாயம் இருக்குது. இந்த நாட்டையே ஆளும் கட்சி அது. ஆனால் சட்டசபையில் ஒத்த எம்.எல்.ஏ. கூட இல்லாத பா.ம.க.வோ நான்கு மாநகராட்சிகளை கேட்கிறாங்க. அதாவது நான்கு மேயர்கள் கண்டிப்பாக வேண்டுமாம். உள்ளாட்சி பதவிகளில் மொத்தமா முப்பது சதவீதத்தை கேட்கிறாங்க டாக்டர்கள் ரெண்டு பேரும். இவங்களை சர்வசாதாரணமா தவிர்க்கவும் முடியாது. காரணம், விக்கிரவாண்டி தொகுதியில் கழக வெற்றிக்கு முக்கிய காரணம் ராமதாஸ்தான். ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொளுத்திய விமர்சன ராக்கெட்டுகள்தான் மக்களை எங்க பக்கம் திருப்பியது. 

இதெல்லாம் விட கொடுமை தே.மு.தி.க. மூன்று இடங்களைக் கேட்பதுதான். வழி நடத்த தலைவர் இல்லாமல், பிரேமலதாவையெல்லாம் நம்பி நடந்து கொண்டிருக்கும் அந்த கட்சியும் மூணு மேயர் வேணும்னு அடம்பிடிக்குது. இப்படி கூட்டணிகளுக்கு அள்ளியள்ளி கொடுத்துட்டா கடைசியில எங்க கையில் என்னதான் இருக்கும்? இதையெல்லாம் கூட்டணிகளிடம் சொல்லிப் பார்த்தாச்சு. உடனே ‘சரி கொடுக்க மனமில்லேன்னா, எங்களுக்கு இந்த கூட்டணியில் இடமில்லைன்னுதானே அர்த்தம். விலகிக்கிறோம்.’ன்னு மூஞ்சுக்கு நேரா மிரட்டுறாங்க. போனா போதுன்னு எடுத்து எறிஞ்சு பேசுற நிலையில் கட்சியும் இல்லை. அதனாலதான் முதல்வர் எடப்பாடியார் பெரிய சோகத்தில் இருக்கிறார். ஓவர் பிரஷர் மற்றும் மனக்கவலையில் சில நேரம் ‘ஏன்தான் இந்த பதவிக்கு வந்தேனோ?!’ன்னு வருந்துறார் மனிதர். பாவம்!” என்கின்றனர். 
அப்படியா!?

click me!