விமான விபத்தில் செத்தவர்களுக்கு 10 லட்சம்.. மண்ணில் புதைந்தவர்களுக்கு 5 லட்சமா.? கேரளா மீது சீமான் அட்டாக்!!

By Asianet TamilFirst Published Aug 11, 2020, 9:22 PM IST
Highlights

சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியிலும் தமிழர்கள் பாராமுகத்துடன் நடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை.


மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே. ஆனால், சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறேன்.


1. தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இனியும் இடங்கொடுக்காமல் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. நிலச்சரிவில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிகபட்ச இழப்பீட்டையும் உரிய துயர் துடைப்பு உதவிகளையும் வழங்க வேண்டும்.
3.இறந்தவர்களின் உடல்களை முறையாக நல்லடக்கம் செய்ய அவர்களது உறவினர்களிடம் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
4. வீடு உட்பட அனைத்து உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கையறு நிலையில் நிற்பவர்களுக்கு உடனடியாக மறுவாழ்விற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.
5. அதிக வேலை வாங்குவதற்காகத் தேயிலை தோட்டம் அமைந்துள்ள மலைச்சரிவுகளிலேயே தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்புகளை அமைத்து தந்துள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பாதுகாப்பான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

click me!