சேரில் இல்ல, திருமாவை தலையில் தூக்கிட்டு போவோம்.. உனக்கு ஏன் எரியுது.. ஒங்கி குத்திய தொண்டர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 12:30 PM IST
Highlights

திருமாவளவனை அவரது தொண்டர்கள் தாங்குவதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் அவரை அவதூறாக விமர்சித்து வருகின்றனர். அவர் தொண்டர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர், சேர்ந்து விளையாடக் கூடியவர், உடற்பயிற்சி செய்யக்கூடியவர், பலமுறை அவர் சேரிலும், சகதியிலும் தான் வேளச்சேரியில் இருந்து வருகிறார். பல தலைவர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் நிலையில், திருமாவளவன் எத்தனை மழை புயல் வந்தாலும் வேளச்சேரி அறையில்தான் தங்கிவருகிறார். 

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தொடர் மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை இதுவரை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்த்த கன மழையில் சென்னையின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது, குறிப்பாக வேளச்சேரி முழுவதும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெள்ளிக்கிழமை டெல்லி செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரது அறையில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்திருந்தது. அவர் ஷூ மற்றும் பேண்ட் அணிந்திருந்ததால் அவரது தொண்டர்கள் உதவியுடன் இரும்பு சேர் மீது ஏறி நடந்து பின் காரில் ஏறினார். இதற்கான வீடியோவை அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது. இதை பாஜக தலைவர்கள் சிலர் இதுதான் சமூக நீதியா, சமூக நீதி பேசும் திருமாவளவன் தன் தொண்டர்களை நடத்தும் விதத்தை பாருங்கள் என விமர்சித்திருந்தனர்.

பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது,விடுதலை சிறுத்தைகள் சார்பில் அது தொடர்பாக விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது, இதுதொடர்பாக விளக்கம் கொடுத்த அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சித் தொண்டர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக நடத்தும்  எண்ணம் எனக்கு இல்லை. இது என்னை விமர்சிப்பவர்களுக்கே தெரியும். என்னுடைய கால்கள் சேறு  சகதியை படாத கால்கள் இல்லை, டெல்லி கிளம்புவதற்காக ஷூ, சாக்ஸ் அணிந்திருந்தாலும் அது மழை நீரில் நனைந்து விட்டால் மூன்று மணி நேரம் விமானத்தில் எப்படி பயணிக்க முடியும் என்பதாலும் தொண்டர்கள் உதவியுடன் இரும்பு சேர் மீது நடந்து காரில் ஏறினேன் என்றார்.

இந்நிலையில் அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் அக்கட்சியின் இளைஞரணி மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழர் ஆகியோரும் திருமா சார்பில் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சங்க தமிழன், 2000 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டு இருக்கிறது. எங்கள் மக்கள் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் தலித் மக்கள் மீது அக்கறை வந்தவர்களைப் போல பாஜகவினர் பேசுகின்றனர். எங்கள் தலைவரை நாங்கள் பல்லக்கிலா தூக்கிச் சென்று விட்டோம்.

பல்லக்கில் தூக்கி  செல்லக்கூடியவர்தான் திருமாவளவன், தூக்கி கொண்டாட வேண்டியவர்தான் அவர்.  எங்கள் தலைவருக்கு ஆதரவாக திருமாவை கொண்டாடுவோம் என்ற ஹாஸ்டாக் வைரலாகி வருகிறது. அவரை பல்லக்கில் தூக்கிச் செல்ல பல்லாயிரம் தோழர்கள் இருக்கிறார்கள், அதில் அவருடன் இருக்கிற தம்பி 3 தம்பிமார்கள் தலைவருடன் எப்போதும் இருக்கிறவர்கள் அவரை இருக்கையில் ஏற்றி காரில் அனுப்பி வைத்துள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது, தொண்டர்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் தலைவர்தான் திருமாவளவன், தொண்டர்கள் வாங்கிக் கொடுக்கும் உடைகளை தான் அவர் அணிந்து கொள்கிறார். இரவெல்லாம் பயணம் செய்துவிட்டு தூக்கமின்றி காலையில் எழுந்து அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்படுவதற்காக தயாரானார். அதற்கு முன்பாகவே வேளச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய சூழல் அவருக்கு இருந்தது. அதனால் தலைவர் தண்ணீரில் இறங்கினால் ஷூ நனைந்து விடும் என்பதால் எங்கள் தோழர்கள் அவரை இருக்கையில் ஏற்றி நடக்க வைத்து காரில் ஏற்றி அனுப்பினர். இதை கட்சியைச் சேர்ந்தவர் இணையதளத்தில் வெளியிட அதை எடுத்து பாஜகவினர் அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சித்து வருகின்றனர்.

திருமாவளவனை அவரது தொண்டர்கள் தாங்குவதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் அவரை அவதூறாக விமர்சித்து வருகின்றனர். அவர் தொண்டர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர், சேர்ந்து விளையாடக் கூடியவர், உடற்பயிற்சி செய்யக்கூடியவர், பலமுறை அவர் சேரிலும், சகதியிலும் தான் வேளச்சேரியில் இருந்து வருகிறார். பல தலைவர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் நிலையில், திருமாவளவன் எத்தனை மழை புயல் வந்தாலும் வேளச்சேரி அறையில்தான் தங்கிவருகிறார். மற்றவர்களைப் போல அவர் ஒருபோதும் ஆடம்பரத்தை விரும்பாதவர். நாங்கள் பலமுறை அவரை நட்சத்திர ஓட்டல் அறைகளில் தங்க அழைத்தாலும் அவர் அதை ஏற்றுக்கொண்டதில்லை. இப்படிப்பட்டவருக்கு எதிராக  பாஜகவினர் இப்படி விமர்சிப்பது சனாதன புத்தியின் வெளிப்பாடுதான்.  எங்கள் தலைவரை நாங்கள் இருக்கையில் அல்ல தலையில்கூட தூக்கி கொண்டாடுவோம் ஏன் உங்களுக்கு எரிகிறது  என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
 

click me!