எதற்கும் லாயக்கற்ற நீங்கள்... இப்படியும்  பொய்யை உண்மையாக்கி...  இத்தகைய நாடகங்களை அரங்கேற்றலாமா? ராமதாஸ் தாறுமாறு

Asianet News Tamil  
Published : May 11, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
எதற்கும் லாயக்கற்ற நீங்கள்... இப்படியும்  பொய்யை உண்மையாக்கி...  இத்தகைய நாடகங்களை அரங்கேற்றலாமா? ராமதாஸ் தாறுமாறு

சுருக்கம்

Non-sugar mills provide outstanding nationalize

தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு மது விற்பனை, மணல் கொள்ளை தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு. மீண்டும் இப்படி ஒரு  பொய்யை உண்மையாக்கி, இத்தகைய நாடகங்களை அரங்கேற்றலாமா என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  தமிழ்நாட்டிலுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என்று கைவிரித்து விட்டதாக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு மது விற்பனை, மணல் கொள்ளை தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1347 கோடி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.236 கோடி என மொத்தம் ரூ.1583 நிலுவைத் தொகை வைத்துள்ளன. இவற்றை வசூலித்துத் தருவதாக கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசு கூறி வரும் போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உழவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தீப ஒளித் திருநாளுக்குள் வழங்கப்பட்டு விடும்; பொங்கலுக்குள் வழங்கப்படும்; ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் பலமுறை தவணை கூறி விட்டாலும் இதுவரை ஒரு பைசா கூட உழவர்களுக்கு கிடைக்கவில்லை.

உழவர்களுக்கான நிலுவைத் தொகையை விரைவில் பெற்றுக் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்த விஷயத்தில் அரசின் தோல்வியை வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘‘நானும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சர்க்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்’’ என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். கரும்பு விவசாயிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்கும்படி 10 முறை அமைச்சர்கள் பேச்சு நடத்தியும், அதை சர்க்கரை ஆலைகள் ஏற்க மறுத்தால் அதை விட பெரிய அவமானம் எதுவும் அரசுக்கு இல்லை.

விவசாயிகளை ஏமாற்றுவது மட்டுமின்றி, அரசின் ஆணைக்கும் கட்டுப்பட மறுக்கும் சர்க்கரை ஆலைகள் மீது மிகக்கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யும் துணிச்சலும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. எனவே, சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்தது போலவும் இருக்க வேண்டும்; அந்த நடவடிக்கையால் சர்க்கரை ஆலைகள் பாதிகப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள இரு தனியார் சர்க்கரை ஆலைகளின் கிடங்குகளை தமிழக அரசு மூடி முத்திரையிட்டுள்ளது. இதனால் உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை; இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பது தான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

உதாரணமாக, தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் செயல்பட்டு வரும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உழவர்களுக்கு ரூ.30.76 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த ஆலைக்கு சொந்தமான கிடங்கில் பல்லாயிரம் டன் சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆலை மூடி முத்திரையிடப்படவுள்ள செய்தி ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தே ஆலை நிர்வாகத்துக்கு கசியவிடப்பட்டதால் பெரும்பாலான மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் கிடங்குக்கு முத்திரையிட்ட போது, அதில் ரூ.4 கோடி மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே இருந்தது. இது ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 13% மட்டுமே. அதேபோல், கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் அமைந்துள்ள அம்பிகா சர்க்கரை ஆலை ரூ.60 கோடி நிலுவைத்தொகை வைத்துள்ள நிலையில் அங்கிருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்ற பொய்யை உண்மையாக்கி, ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் இருப்பதற்காகவே இத்தகைய நாடகங்களை தமிழக ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகின்றனர். இதை உழவர்கள் நம்ப மாட்டார்கள்.

தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால் போன்ற பொருட்களை தயாரித்தாலும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை பதுக்கிக் கொண்டு சர்க்கரை விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மட்டும் வரவு வைத்து நட்டக் கணக்குக் காட்டுகின்றன. இந்த மோசடிகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் மொத்தமாக கிடைத்து விடுவதால் ஆலைகள் நடத்தும் மோசடிகளை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உழவர்களுக்கு இன்று வரை நிலுவை கிடைக்காததற்கு காரணமே ஆட்சியாளர்களின் துரோகம் தான்.

தமிழக ஆட்சியாளர்களுக்கு உண்மையாகவே உழவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் சர்க்கரை கிடங்குகளை மூடியிருக்கக் கூடாது. மாறாக ஆலைகளையே மூடி அவற்றை அரசுடைமையாக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆலைகளிடமிருந்து தங்களுக்கு கிடைக்கும் வருமானம் தடைபடக்கூடாது என்பதற்காக அதை செய்ய அரசு மறுக்கிறது. ஆனால், அரசின் உத்தரவையே ஆலைகள் செயல்படுத்த மறுத்து விட்ட நிலையில் அவை அனைத்தையும் அரசுடைமையாக்கி பொறுப்பான அதிகாரிகளை நியமித்து இயக்க வேண்டும். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தில் உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!