வேலூரில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்... இடைத்தேர்தல் பாணியில் களமிறங்க தயாராகும் கட்சிகள்!

By Asianet TamilFirst Published Jul 11, 2019, 7:03 AM IST
Highlights

ஏப்ரல் 18 அன்று வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால், அது வழக்கமான தேர்தலாக நடந்து முடிந்திருக்கும். ஆனால், தற்போது வேலூரில் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத்தேர்தல் பாணியில் தேர்தலை திமுக, அதிமுக கட்சிகள் அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தல் பாணியில் இத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவருவதால், வேலூரில் ஓட்டல்கள், லாட்ஜ்கள் முழுவதுமாக கட்சிக்காரர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான, வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி ஜூலை 18-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். ஜூலை 19 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஜூலை 22 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும்.
இத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். அமமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இதுவரை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18 அன்று வேலூரில் தேர்தல் நடைபெற்றிருந்தால், அது வழக்கமான தேர்தலாக நடந்து முடிந்திருக்கும். ஆனால், தற்போது வேலூரில் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத்தேர்தல் பாணியில் தேர்தலை திமுக, அதிமுக கட்சிகள் அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என நிர்வாகிகளைக் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுகவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் என அனைவரையும் களத்தில் இறக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக, அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் முழுமையாக வந்து வேலூரில் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதால், வேலூர் நகரில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள் தங்கும் விடுதிகள் ஆகஸ்ட் 3-ம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. 

click me!