ஆளுநரின் வாகன அணிவகுப்பில் கற்கள், கொடி வீசப்பட்டதா..? தமிழக காவல் துறை விளக்கம்.!

Published : Apr 19, 2022, 10:09 PM IST
ஆளுநரின் வாகன அணிவகுப்பில் கற்கள், கொடி வீசப்பட்டதா..? தமிழக காவல் துறை விளக்கம்.!

சுருக்கம்

ஆளுநரின் கார் மற்றும் அவரது கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்தனர்.

தமிழக ஆளுநரின் வாகன அணிவகுப்பில்  கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தமிழக காவல்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

காவல் துறை விளக்கம்

ஆளுநர் வானகத்தின் மீது கொடி கம்பு வீசி நடந்த இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து  தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் கருத்திட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆளுநரின் வாகன அணிவகுப்பில்  கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பூர்வ நடவடிக்கை

அதில், “ஆளுநர்பாதுகாப்புக்காக மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2 காவல் துறை துணை தலைவர்கள், 6 காவல் துறை கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர் கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநரின் கார் மற்றும் அவரது கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்தனர். உடனே பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!