எங்களுக்கு ஆட்சியே வேண்டாங்க !! கைகழுவிய பாஜக… மகாராஷ்ட்ராவில் புதிய நெருக்கடி !!

By Selvanayagam PFirst Published Nov 11, 2019, 6:46 AM IST
Highlights

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது இல்லை என்றும், சிவசேனாவே ஆட்சி அமைத்துக் கொள்ளட்டும் என்றும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
 

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் முடிவு வெளியாகி நேற்றுடன் 17 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்காமல் மோதல் போக்கை கடைப்பிடித்தன. 

முதலமைச்சர்  பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு பகிர்ந்து தர வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்தது. இதற்கு பாரதீய ஜனதா உடன்பட மறுத்து விட்டது.
இந்த மோதல் காரணமாக முதலலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதலமைச்சராக செயல்படுமாறு அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தற்போதைய 13-வது மகாராஷ்ட்ரா சட்டசபையின் ஆயுள் காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் நேற்று வரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரவில்லை.

இந்த பரபரப்பான நிலையில் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ்  கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். பின்னர்அரசின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஸ் கும்பகோணியை கவர்னர் ராஜ்பவனுக்கு அழைத்தார். குழப்பமான சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அட்வகேட் ஜெனரலுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனால் கவர்னர் அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதாவிடம் ஆட்சி அமைக்க முடியுமா? என்று கேட்டு கவர்னர் கடிதம் அனுப்பினார். அந்த கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், அவருக்கு கவர்னரின் கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில், ஆட்சியமைக்க உங்களுக்கு விருப்பம் உள்ளதா?, உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா? என்று பதிலளிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை கவர்னர் கேட்டுக்கொண்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே கவர்னரின் அழைப்பை ஏற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முன் வருமா? அல்லது பின்வாங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட இந்தநிலையில்,  திடீர் திருப்பமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை அம்மாநில பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில். தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டியத்தில் நாங்கள் ஆட்சி அமைக்க போவதில்லை. பா.ஜ.க. சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், சிவசேனா அதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளது. 

சிவசேனாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியை கை விடுகிறோம். சிவசேனா,காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கப்பட்டும். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

click me!