இல்லை.. இல்லை.. 2024-ஆம் ஆண்டும் நமக்கில்லை... புலம்பி தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர்..!

By Asianet TamilFirst Published Dec 2, 2021, 10:49 PM IST
Highlights

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதை மாற்ற முடியும். ஆனால், அதற்கு 300 எம்.பி.க்கள் நமக்கு வேண்டும். ஆனால், 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும்கூட காங்கிரஸ் இந்த எண்ணிக்கையை பெற முடியாது.

வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்தவர். அண்மைக்காலமாக குலாம் நபி ஆசாத்துக்கும் காங்கிரஸ் தலைமைக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக சோனியாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதினர். இத்தலைவர்களை ஜி 23 என அழைக்கிறார்கல். 23 காங்கிரஸ் தலைவர்களின் குழுவின் முக்கிய அங்கமாக குலாம் நபி ஆசாத் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் காஷ்மீரில் பூஞ்ச் நகரில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் ஆசாத் பேசுகையில், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவு 370, கடந்த 2019- ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவை மீட்டெடுப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை மக்களை மகிழ்விப்பதற்காக நம் கையில் இல்லாததைப் பற்றியெல்லாம் நான் எதுவும் பேச மாட்டேன். நட்சத்திரங்களையும் சந்திரனையும் பறித்துத் தருவேன் என்றெல்லாம் நான் உங்களுக்கு எந்த உறுதியையும் அளிக்க முடியாது. இந்தப் பிரச்சினை தீர வேண்டுமென்றால், அது நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. நீதிமன்றத்தைத் தவிர வேறு யாரேனும் எதையும் செய்ய முடியாது.

அப்படி செய்ய முடியும் என்றால் அது இந்த நடவடிக்கைக்கு காரணமான தற்போதைய அரசுதான் அதை செய்யவும் முடியும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதை மாற்ற முடியும். ஆனால், அதற்கு 300 எம்.பி.க்கள் நமக்கு வேண்டும். ஆனால், 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும்கூட காங்கிரஸ் இந்த எண்ணிக்கையை பெற முடியாது. ஒரு வேளை கடவுள் விரும்பினால் நாம் வெற்றி பெறுவோம். ஆனால், இப்போதைக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் நான் எந்தப் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுக்க மாட்டேன். மேலும், காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சிக்கிக்கொண்டுள்ளது. அதைத் தாண்டி அக்கருத்துக்கள் வெளியே வருவதில்லை.” என்று குலாம் நபி ஆசாத் பேசினார்.

2024-ஆம் ஆண்டில் எப்படியும் ஒரு மாற்றம் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விரக்தியுடன் பேசியிருப்பது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!