
கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், குழாய் மூலமே உணவு வழங்கப்படுவதாக அப்போலோ நிர்வாகம் நேற்று அறிக்கை விட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியருமான மாலினி பார்த்தசாரதி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதாகவும் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்ற நம்பகத் தன்மையை வெளிப்படுத்தினார். இவரின் இந்த டுவிட்டர் பதிவு, அனைவருக்கும் நம்பிக்கையைத் அளித்திருந்தது.
அதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நேற்றும் மாலினி பார்த்தசாரதி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ட்ரெகியோஸ்டோமி சிகிச்சைக்கு பின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றங்கள் உள்ளதாக கூறியுள்ளார். தற்போது முதலமைச்சருக்கு வென்டிலேட்டர் உதவியும் தேவைப்படவில்லை என்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மாலினி டுவிட்டரில் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தமிழக மக்கள் மனதில், ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பணியை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஜெலலிதா உடல்நலம் குறித்து, மாலினி பார்த்தசாரதிக்கு தகவல் அளிப்பவர் யார் என்றால், ஜெயலலிதாவின் நண்பரும், பத்திரிக்கையாளருமான சோ அளிக்கும் தகவலின் பேரிலேயே மாலினி வெளியிடுவதாக தெரிகிறது.