
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி உடல்நலம் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து வந்தது. முதலமைச்சர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து நுரையீரல் நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, அப்போலோ மருத்துவமனைக்கு வந்து, முதலமைச்சருக்கு சிகிச்சை மேற்கொண்டார்.
ஜெயலலிதா உடல்நலம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் மருத்துவமனை சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர். நேற்று, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்று அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதால், அவருக்கு தொற்று ஏற்படலாம் என்று கருதி, அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதால் அவர் இயற்கை முறையில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவரால் எதுவும் பேச முடியாமல் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவால் இன்று கண் திறந்து பார்த்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சருக்கு தற்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும், குழாய் மூலமே உணவு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருப்பதால் இன்னும் ஒரு வார காலத்துக்குள் குணமடைந்து விடுவார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.