
சத்திரிய அரசியல் செய்வது அ.தி.மு.க.வின் வழக்கம். ஆனால் சாணக்கிய அரசியல்தான் தி.மு.க.வின் ஸ்டைல். என்னதான் தி.மு.க.வை பல காலங்கள் ஆட்சி அரியணையிலிருந்து வனவாசம் அனுப்பியிருந்தாலும் கூட ஜெயலலிதாவை ’சொத்து குவிப்பு வழக்கு’ எனும் சவுக்கை காட்டி ஒவ்வொரு நாளும் பதறிப்பதறி ஓட வைத்தது தி.மு.க.தான்.
தமிழகத்தில் நடந்த வழக்கை முன் யோசனையுடன் கர்நாடகாவுக்கு மாற்றியது பெரும் சாணக்கியத்தனம். இன்று மெரீனா கடற்கரையில் மெளன நித்திரையிலிருக்கும் ஜெயலலிதாவுக்கு ‘குற்றவாளி எண் 1’ எனும் பட்டத்தை மேல் முறையீட்டு மனு நீதிபதியால் சொல்ல வைத்ததும் அக்கட்சியின் சாணக்கியத்தனமே.அப்படியொரு செயலைத்தான் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் அரசுக்கு எதிராகவே கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தை வழக்காக்கிய விஷயத்திலும் பின்பற்றியது தி.மு.க.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த வழக்கில் இன்று தீர்ப்பு. தங்கள் கட்சியின் சட்டமன்ற கொறடாவின் வார்த்தையை மீறி செயல்பட்டிருப்பதால் நிச்சயம் பன்னீர் உள்ளிட்ட 11 பேருக்கும், வாக்கெடுப்பை புறக்கணித்த பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கும் எம்.எல்.ஏ. தகுதி போய்விடும் என்று பெரும் தரப்பு சொல்லி வருகிறது. ஆனால் எதிர் தரப்போ ‘இல்லை. பன்னீருக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.’ என்று சொல்லி வருகிறது.
இந்நிலையில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனால் தமிழக அரசியலிலும், தமிழக அரசிலும் உடனடியாக எந்த விளைவும் ஏற்படாது என்று ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதை வெளியிட்டிருப்பவர் தி.மு.க.வின் பேச்சாளரான ரவீந்திரனே. தே.மு.தி.க.விலிருந்து புலம் பெயர்ந்து, இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கும் இவர், “இந்த வழக்கின் மூலம் சட்டப்படி, நியாயப்படி, நீதிப்படி, விதிகளின்படி, தார்மீகப்படி பன்னீர் உள்ளிட்டோர் தங்கள் எம்.எல்.ஏ. தகுதியை இழக்க வேண்டும். தீர்ப்பு அப்படித்தான் இருக்கவேண்டுமென நம்பப்படுகிறது.
ஆனாலும் பன்னீர் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால் உடனே தமிழக அரசிலோ அல்லது அரசியலிலோ எந்த ஒரு மாற்றமும் உடனடியாக நடந்து விடாது. இந்த தீர்ப்பின் படி நியாயம் நிலைநாட்டப்பட்டிருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் தோற்ற தரப்பு நிச்சயம் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டிற்கு செல்லும். அங்கே பெஞ்சில் தான் இதற்கான இறுதி தீர்ப்பு கிடைக்கும்.” என்று சொல்லியிருக்கிறார்.
வழக்கு போட்ட தி.மு.க. தரப்பே இப்படியொரு வார்த்தையை உதிர்த்திருப்பதால் தீர்ப்பு மீதான சுவாரஸ்யம் ஏகத்துக்கும் குறைந்திருக்கிறது.