
தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியிடப்படாது எனத் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் திங்கள்கிழமைக்கான பணிப் பட்டியலில் இந்த வழக்கு குறித்த எந்த விவரமும் இடம் பெறவில்லை என்பதால், நாளை தீர்ப்பு அளிக்கப்படாது.
ரூ.100 கோடி அபராதம்
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து குவித்ததாக கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகள் இவ்வழக்கை விசாரித்த பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் 2014-ம் ஆண்டு 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
விடுதலை
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலா ளர் அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரனை செய்தது. இறுதிக்கட்ட விசாரணைகள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
ஒருவாரம்
இந்நிலையில், கடந்த வாரம் தீர்ப்புகுறித்து கர்நாடக வழக்கறிஞர்கள் கேட்டபோது, அடுத்த ஒருவாரத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல்குழப்பம்
ஆதலால், கடந்த வாரம் தீர்ப்பு அளிக்கப்படும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்பார்த்து இருந்தனர். மேலும், தமிழக்தின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வமும் தனது பதவியை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்காக ராஜினாமா செய்து இருந்தார்.
ஆனால், தீர்ப்பு ஒரு வாரத்துக்குள் வந்துவிடும் என்ற தெரிந்தவுடன் அதிமுக கட்சிக்குள் குழப்பம் ஏற்படத்தொடங்கியது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனியாக ஒரு அணி செயல்படத் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் அணி மாறி வருவதால், பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஆளுநர் தாமதம்
பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற ஆதரவு கடிதத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அளித்துவிட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி ஆளுநர் , சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க தாமதம் செய்து வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இந்த சூழலில் நாளை தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நாளை பணிப்பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கு இடம் பெறவில்லை. ஆதலால், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு பொய்த்துப் போயுள்ளது.
மேலும், திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளில் ஒருவரான அமிதவா ராய் விடுப்பில் செல்கிறார். ஆதலால், நாளை, மற்றும் நாளை மறுநாளுக்கு பின்பே தீர்ப்பு பற்றிய தேதி விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
தீர்ப்பைக் காரணம் காட்டியே ஆளுநர் பதவி ஏற்பை தாமதம் செய்கிறார் என அதிமுக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தீர்ப்பு தேதி தாமதம் ஆகும் போது, சசிகலா முதல்வராக பதவி ஏற்பதில் இழுபறி தொடரும்.