கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை.. வீட்டு வாடகை இல்லை... ’ஸ்பெஷல் பேக்கேஜ்’ கொடுக்குமா மத்திய அரசு..?

By Thiraviaraj RMFirst Published Mar 25, 2020, 4:52 PM IST
Highlights

இந்தியா முழுவதும் கொரானா பீதியில் உறைந்து போய் இருக்கிறது. இந்த நிலையில் 'எதிர்மறை' கருத்துகள், கட்டுரைகள் கூடாதுதான். ஆனாலும், சிலநேரங்களில் சிலவற்றைச் சொல்வது, தவிர்க்க முடியாமல் போகிறது. 
 

இந்தியா முழுவதும் கொரானா பீதியில் உறைந்து போய் இருக்கிறது. இந்த நிலையில் 'எதிர்மறை' கருத்துகள், கட்டுரைகள் கூடாதுதான். ஆனாலும், சிலநேரங்களில் சிலவற்றைச் சொல்வது, தவிர்க்க முடியாமல் போகிறது. 
 
21 நாட்கள் நாடு முழுவதும்  'தனிமைப் படுத்தப் பட்டுள்ளன'. எங்கு பார்த்தாலும் ஊரடங்கு, கட்டுப்பாடு. புரிந்து கொள்ள முடிகிறது. நோய் பரவாமல் தடுக்க, 'விலகி இருத்தல்' மிக அவசியம். அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை மதித்து நடப்போம். அரசுக்கு நமது ஒத்துழைப்பை உறுதி செய்வோம். வெளியில் செல்லாது, வீட்டில் இருந்து உயிர்களைக் காப்போம். 

கொரானா அச்சுறுத்தல், சாமான்யர்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக பாதித்து இருக்கிறது. வருமானத்துக்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால், ஒவ்வொரு நாளும் ஒருயுகம் போல், நகர்கிறது. மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று ஏக்கத்துடன் காத்துக் கிடக்கும் மக்களின் துயர் தீர்க்க செய்ய வேண்டியது என்ன...? 

மத்திய மாநில அரசுகள், கொரானாவுக்கு எதிராக, சிறப்பாகப் பணியாற்றுவதாகவே தெரிகிறது. அதிலும் தமிழ்நாடு அரசு, எடுத்து வரும் நடவடிக்கைகள் அபாரமாக உள்ளன.  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன், திறம்படச் செயல் புரிந்து வருவதாய், அநேகமாகத் தமிழகம் முழுவதும் பேசப் படுகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நலத் திட்டங்கள் 'சபாஷ்' போட வைக்கின்றன. குடும்ப அட்டைதாரருக்கு ரூ. 1000 உதவித் தொகை; நடைபாதை வணிகர்களுக்கு ரூ 2000 இழப்பீடு;  ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி புரிவோருக்கு, கூடுதலாக 2 நாள் ஊதியம்; இலவச அரிசி, பருப்பு, ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் தேடிச் சென்று உணவு வழங்குதல்... தமிழக அரசு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல் புரிகிறது. பாராட்டுகள். ஆனால், மத்திய அரசு....?
 
முதல் அமைச்சர் திட்டங்களை அறிவித்த சில மணி நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில: மார்ச் 2019 அன்று முடிவடைந்த, 31 2018-19 நிதி ஆண்டுக்கான, வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய, இறுதி நாள் - 31 மார்ச் 2020. இது, மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப் படுகிறது. அதாவது, ஜூன் 30 வரை தாக்கல் செய்யலாம். 

இதே போன்று, 'பான்' என்னும் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கும் மார்ச் 31தான் இறுதி நாளாக இருந்தது; இதுவும் ஜூன் 30 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. 'ஏ.டி.எம்' மையங்களில் எடுக்கப்படும் பணத்துக்கு கட்டணம் (fee) கிடையாது. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால், ஜூன் 30 வரை அதற்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. இப்படி இன்னும் சில அறிவிப்புகள். 

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். - சாமான்யனுக்கு இதனால் ஒரு தம்பிடிக்கு பயன் உண்டா..? வருமான வரி தொடர்பான கால நீட்டிப்பு, நடைமுறை (procedure) அல்லது விதிமுறை சார்ந்த நிவாரணம். 'உங்க பதில் என்னவோ.. அதை நீங்க இன்னைக்கே சொல்லணும்னு இல்லை. இன்னும் ஒரு வாரம் கழிச்சுக்கூட சொல்லலாம்..' என்பது போல்தான் இது. 'பெரிதாக' எதுவுமே இல்லை. சாதாரண செய்தி அறிக்கை மூலம் சொல்லி விட்டுப் போகலாம். நிதி அமைச்சர் நேரே வந்து சொல்ல வேண்டிய தேவையே இல்லை. 

'ஏடிஎம் பணம்; கணக்கில் குறைந்தபட்சத் தொகை... இவை எல்லாம் அநீதியான கட்டணங்கள். இவை எல்லாம் வசூலிக்கப்படுவதே தவறு. தன்னுடைய கணக்கில் இருக்கிற பணத்தை எடுப்பதற்கு ஒருவர் கட்டணம் செலுத்தச் சொல்வதே அநியாயம். இதே போன்றுதான், தன்னுடைய வசதிக்கு ஏற்ப குறைந்தபட்ச பணத்தை வைத்துக் கொள்ள ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் இதற்கும் அபராதக் கட்டணம். இந்த 'அநீதிகள்', அடுத்த 3 மாதங்களுக்கு இருக்காதாம். இவை எல்லாம் 'கொரானா' நிவாரணமாம்.

'உங்க கணக்குல பணம் இல்லைன்னா பரவாயில்லை... அதுக்காக அபராதம் எல்லாம் போடப்போறது இல்லை..' இந்த அறிவிப்பு, மன்னிக்கவும், வறியவரை சிறுமைப் படுத்துகிறது. இல்லாதோர்க்கு தருவதுதான் மனிதம்;'உன்னிடம் இல்லையா..? மன்னித்து விடுகிறேன்.. போ!' என்று சொல்வது எவ்வகை நீதி..? மத்திய அரசு உடனடியாகச் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். சொல்லொணாத் துயரத்தில் இருக்கும் பொது மக்கள், உண்மையிலேயே நிவாரணம் பெறுகிற வகையில் அது இருத்தல் வேண்டும். 

அகோரப் பசியுடன் இருக்கும் காட்டு யானைக்கு, ஒரு பிடி அவலும் பொரியும் தந்து மகிழ்ச்சி காண்பது, மன்னிக்கவும், குரூரம். அடுத்த சில மாதங்களுக்கு, அதாவது, முற்றிலுமாக இயல்பு நிலை திரும்புகிற வரையில், எல்லாப் பொருட்களுக்கும் 'ஜிஎஸ்டி' யில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். 'வரியில்லா வாழ்க்கை' - குறைந்தது மூன்று மாதங்களுக்கு, மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். 

பொதுப் போக்குவரத்து, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். மின் கட்டணம், வீட்டு வாடகை ஆகியவற்றில் சலுகை தரலாம். அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப் படலாம். சிறு குறுந்தொழில்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கலாம். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மானியம் தரலாம்.

அரசுத் துறைகளில் வீண் செலவுகளைக் குறைக்கலாம். அமைச்கர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மாத ஊதியம், மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப் படலாம்; செல்வந்தர்களுக்கு வருமான வரியுடன் சேர்ந்து 'கொரானா செஸ்' (cess)விதிக்கப்பட்டு, உடனடியாக செலுத்தச் சொல்லலாம். 

மாபெரும் வணிக வளாகங்கள், விஸ்தாரமான கட்டிடங்களை வாடகைக்கு விட்டவரிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்கலாம். பல்லாயிரம் கோடி முதலீட்டில் வணிகம் செய்யும் அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், கொரானா நிவாரண நிதிக்குக் கட்டாயம் பங்களிக்கச் சொல்லலாம். இப்படி எவ்வளவோ செய்யலாம்தான். ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை;  யாருக்கும் இப்படி ஒரு மனநிலை இருப்பதாகவே தெரியவில்லை.

'மன வலிமையுடன் இருங்கள்; பொறுத்துக் கொள்ளுங்கள்; தொடர்ந்து போராடுங்கள்; உங்களின் இன்னல்கள் எல்லாம் தீர்ந்து போகும்; இதனை ஒரு கசப்பு மருந்தாக எண்ணி ஏற்றுக் கொளுங்கள்..' இது மாதிரியான அறிவுரைகள், நிறைய கேட்டு விட்டோம். 

இப்போதைய தேவை - பொது மக்களுக்கு உதவுகிற வகையில், ஒரு 'ஸ்பெஷல் பேக்கேஜ்'. எப்போது வரும்..? எப்போதாவது வருமா...? 

-எழுத்தாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
  

click me!