எடப்பாடி ஆட்சியை நாங்க கவிழ்க்க வேண்டியதில்லை ! தானா கவிழ்ந்திரும் !! அதிரடி ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published May 18, 2019, 8:08 AM IST
Highlights

மே 23- ஆம்  தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் எனவும் அதை நாங்கள் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்றும்  அரவக்குறிச்சியில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசினார்.
 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் .செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். 

தொகுதிக்குட்பட்ட தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், தென்னிலை, பரமத்தி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசினார்.

மோடியின் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வருகிற 19-ந் தேதி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். ஆகவே இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழலுக்கு வந்துவிட்டது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மோடிக்கு முடிவு கட்டப்படுவதோடு, எடப்பாடி ஆட்சியும் தானாகவே கவிழ்ந்துவிடும் என்பது நிச்சயமாகிவிட்டது என தெரிவித்தார்.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று மேற்கொள்கிற பிரசாரங்களில் எல்லாம், எனது ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சிக்கிறார் என தொடர்ந்து பேசி வருகிறார். 

ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அது தானாகவே கவிழப்போவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 இடைத்தேர்தலிலும், ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என ஸ்டாலின் தெரித்தார்.


சர்வாதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஆட்சி செயல்படலாம். மத்தியில் மோடி இருந்தாலாவது ஆட்சியை காப்பாற்றுவார். ஆனால் அவரே வீட்டுக்கு செல்வது உறுதி. மேலும் தற்போது கோர்ட்டுக்கு கோடைகால விடுமுறை என்பதால் அப்பீலுக்கும் செல்ல முடியாது. எனவே மே 23-ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என கூறினார்..

ஆகவே இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த அயோக்கியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றால், அதற்கு உதய சூரியனுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்..

click me!