
மதிமுக பொது செயலாளர் வைகோவின் நடவடிக்கைகள் அனைத்தும், அண்மைக்காலமாக, நெட்டிசன்களால் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி, தேர்தலில், படு தோல்வியை சந்தித்த பிறகு, அந்த விமர்சனங்கள் நகைச்சுவை மீம்ஸ்களாக வலைத்தளங்களில் வெளிப்பட்டன.
இந்நிலையில், தம்மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கில், தாமாகவே நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் தேவை இல்லை என்று 50 நாட்களுக்கும் மேல் சிறையிலேயே இருந்தார்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டபோது, எனக்கு அதுபற்றி எந்த கருத்தும் இல்லை என்று கூறி, செய்தியாளர்களை வாயடைக்க வைத்து விட்டார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் மாடுகள் விற்பனை தடை சட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஊழல், பாதுகாப்பு படையினருக்கு குடியிருப்பு கட்டுவதில் ஊழல் என்று ஊழல்கள் மலிந்து போயிருந்தன என்றார்.
ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில், கடந்த மூன்று வருடங்களில் எந்த ஒரு ஊழலும் நடை பெறவில்லை என்பதை வரவேற்கிறேன் என்றார்.
அத்துடன், வரவேற்க வேண்டியவற்றை வரவேற்பேன். கண்டிக்க வேண்டியவற்றை கண்டிப்பேன் என்றும் பாதுகாப்பாக ஒரு வார்த்தையையும் அவர் சொல்ல தவறவில்லை.
மக்கள் நல கூட்டணியில் இருந்த கட்சிகளுடன், பல்வேறு கட்சிகளும் மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை எதிர்த்த பொது, வைகோ அதற்கு வரவேற்பு தெரிவித்தார்.
தற்போது, ஊழல் இல்லாத ஆட்சி என்று மோடியை பாராட்டி இருப்பதன் மூலம், வைகோ பாஜகவை நெருங்குகிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.