இனி டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்பே இல்லை !! வட்டி மட்டும் 14,000 கோடியாம் !!

By Selvanayagam PFirst Published Aug 31, 2019, 7:28 AM IST
Highlights

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்போது  1 கோடியே 80 8 லட்சம்  ரூபாய் கோடி கடனில் மூழ்கி உள்ளது என்றும், இதற்கு வட்டி மட்டும் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாலும், டோல்கேட் கட்டணத்தை  குறைக்க  வாய்ப்பே இல்லை என தெரிய வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் (என்எச்ஏஐ) திட்டமிடாத மற்றும் அதிகப்படியான சாலை விரிவாகத் திட்டங்கள் மூலம் பெரும் கடன் சுமையில் திண்டாடி வருகிறது. இதையடுத்து, நிலைமை சீரமைக்க திட்டங்களை தீட்டும்படி, நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் கடந்த 17ம் தேதி கடிதம் எழுதியது. 

அந்த கடிதத்தில் சாலைகள் அமைப்பதற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு அதிக அளவில் இழப்பீடு தர வேண்டியுள்ளது. கட்டுமான செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் கண்டிப்புடன் கூறியிருக்கிறது. 

நெடுஞ்சாலை துறை ஆணையம் இனிமேல் சாலை சொத்து மேலாண்மை கம்பெனியாக செயல்பட வேண்டும். இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும் அந்த கடிதத்தில் பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. 

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு சாலை கட்டுமானப் பணிகள் ஊக்கம் அளிப்பதாக இருந்தது. ஆனால், அதுவே தற்போது பெரும் சுமையாக மாறிவிட்டது. கடன் அதிகமானதால், மத்திய அரசிடம் உதவியை எதிர்பார்த்து நெடுஞ்சாலை துறை காத்திருக்கிறது. ஏற்கனவே பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து திண்டாடி வரும் வேலையில் நெடுஞ்சாலைத் துறையின் கடன் சுமை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. 

இதுவரை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கடன் அளவு ரூ. 1.8 லட்சம் கோடி. இதற்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய். சுங்க கட்டணம் மூலம் வரும் வருவாய் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி  மட்டுமே கிடைக்கிறது. 

இது வட்டியை அடைக்க கூட போதாத நிலையில் உள்ளது என்பதால் ஆணையம் தவிக்கிறது. மோடியின் 5 லட்சம் கோடி பொருளாதார இலக்குக்கு நெடுஞ்சாலை ஆணைய கடன் பெரும் ஆபத்தாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்திய தேசிய நெடுஞ்சாலைஆணையத்தின் மொத்த கடன் ரூ.1.8 லட்சம் கோடி. இதற்கு ஆண்டிற்கு ரூ.14,000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. இது, நெடுஞ்சாலைத்துறை ஆணையம், ஆண்டுக்கு சுங்க சாவடி கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.10,000 கோடியைவிட அதிகமாகும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை இருப்பதால் டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்யவோ, குறைக்கவோ வாய்ப்பில்லைஎன சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!