பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பில்லை.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2020, 2:23 PM IST
Highlights

தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும்,  இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் மீதம் உள்ளது, எனவே பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றும்,  இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் மீதம் உள்ளது, எனவே பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    

கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி கலூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு மூலம் மூடப்பட்டது. ஆனால் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் பள்ளிகளில் ஜுன் மாதம் முதல் பள்ளிகளில் மாணவர்கள் தவிர ஆசிரியர்கள் பணியாளர்கள் தினந்தோறும் வருகைத்தந்து அன்றாட பணிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி தொடர்பில்லாமல் போய்விடக்கூடாது என்ற அடிப்படையில் அரசு கல்வித்தொலைக்காட்சி உள்ளிட்ட தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இதனை ஆசிரியர்கள் கல்வித்தொலைக்காட்சி படபிடிப்புத்தளத்திற்கு சென்று பாடங்களை நடத்தி காட்சி படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் யூடியூப் மற்றும் காணொலி காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டுவருகிறது. அவ்வபோது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மாணவர்களுக்கு பாடந்தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதோடு இதுபோன்ற நெருக்கடியான சூழலில் தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி வருகிறார்கள். நேரிடை பயிற்சிதான் 100 சதவீதம் இருக்கும். ஆனாலும் ஓரளவிற்கு சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களோடு தொடர்பு கொண்டு வருகிறோம். மேலும் NTSE, NMMS போன்ற தேசியத்திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களை தயார் செய்து தேர்வு எழுதியுள்ளார்கள். 

அவ்வபோது சிறுசிறு தேர்வுகள் மூலமும் மாணவர்களை தயார்செய்துவருகின்றோம். இந்நிலையில் இவ்வாண்டு எப்படி பூஜ்யம் கல்வியாண்டாக எடுத்துக்கொள்ள முடியும். கல்வியாண்டு என்பது ஜுன் முதல் ஏப்ரல் வரை உள்ளது. அப்படி பார்த்தால் கூட இன்னும் 4 மாதங்கள் உள்ளது. பூஜ்யம் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஓராண்டு வீணாகப்போகும். மீண்டும் ஒரே வகுப்பில் படிப்பது என்பது தோல்விப்பெற்றதற்கு சமம். மனஉளைச்சலை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் உயர்படிப்பு வேலைவாய்ப்பு அனைத்திலும் ஓராண்டு பின்னடைவு ஏற்படும். இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டிற்கு வாய்ப்பு உருவாகும் சூழல் இல்லை.
 

click me!