பா.ஜ.க கூட்டணி வேண்டாம்..! பா.ம.க, தே.மு.தி.க போதும்..! ஓ.பி.எஸ்., எடப்பாடியை மிரட்டும் மா.செக்கள்!!

By Selva KathirFirst Published Feb 10, 2019, 12:16 PM IST
Highlights

கூட்டணியில் பா.ஜ.கவிற்கு மட்டும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியையும், ஓ.பி.எஸ்சையும் மிரட்டாத குறையாக நெருக்கி வருகிறார்கள்.

கூட்டணியில் பா.ஜ.கவிற்கு மட்டும் இடம் கொடுக்க வேண்டாம் என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியையும், ஓ.பி.எஸ்சையும் மிரட்டாத குறையாக நெருக்கி வருகிறார்கள்.

கடந்த வெள்ளியன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.கவில் எந்த நேரத்திலும் பூகம்பம் வெடிக்கலாம் என்கிற சூழல் நிலவுகிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக மாவட்டச் செயலாளர்களிடம் தகவல்களை கூறி வழி அனுப்பி வைத்தனர். 

பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். எதற்காக பா.ஜ.கவுடன் கூட்டணிஅமைக்க வேண்டும், கடந்த 2004 தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் தோற்றதை மறந்துவிட்டீர்களா என மாவட்டச் செயலாளர்கள் தலைமை கழகத்திற்கு மாறி மாறி தகவல் அனுப்பி வருகின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க – அ.தி.மு.க இடையே தான் போட்டி. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளை விட அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது தான் நம் வழக்கம், எனவே கூட்டணிக்கு பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட சிறு கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் என்று எடப்பாடிக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர்களே அவரிடம் வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள். இதே போல் ஓ.பி.எஸ்சை தொடர்பு கொள்ளும் மாவட்டச் செயலாளர்களும் பா.ஜ.கவுடன் கூட்டணி என்றால் தேர்தல் வேலையையே பார்க்கப்போவதில்லை என்று மிரட்டி வருகின்றனர்.

 

30 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவில்லை என்றால் அதை விட ஒரு அவமானம் அ.தி.மு.கவிற்கு இருக்காது என்கிற ரீதியில் பேசும் சில மாவட்டச் செயலாளர்களின் மன ஓட்டத்தை தான் தம்பிதுரை அவ்வப்போது பிரதிபலித்து வருகிறாராம். பா.ஜ.க இல்லாமல் அமைக்கும் பிரமாண்ட கூட்டணியே தி.மு.கவை எதிர்க்க போதுமானது என்று மாவட்டச் செயலாளர்கள் கருதுவதால் இந்த விவகாரத்தில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் அவசரம் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறார்கள். 

கூட்டணிக்கு கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பை அப்படியே டெல்லிக்கு இருவரும் பாஸ் செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனிடையே பா.ஜ.கவை கழட்டிவிட்டு பா.ம.க, தே.மு.தி.க, வாசன் போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்தாலே போதும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வென்றுவிடலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு தகவல் அனுப்பி வருகிறார்களாம்.

click me!