நோயாளிகளுக்கு எந்தப் பலனுமில்லை..! கொரோனா சிகிச்சையிலிருந்து ரெம்டெசிவிர் நீக்கம்..?

By Thiraviaraj RMFirst Published May 19, 2021, 11:03 AM IST
Highlights

இந்த மருந்தால் கொரோனா நோயாளிகளுக்கு எந்தப்பலனும் இல்லை என சுகாதார துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

கொரோனா சிகிச்சை முறை பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து விரைவில் நீக்கப்படலாம் என டெல்லியில் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் பலனளிக்கும் கொரோனா சிகிச்சை முறையாக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சை முறையை மத்திய அரசு தற்போது கொரோனா சிகிச்சை முறை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதேபோல் ரெம்டெசிவர் மருந்தும் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லியை சேர்ந்த கங்கா ராம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா, ’’கடந்த ஒரு ஆண்டாக பிளாஸ்மா சிகிச்சையால் எந்தவித பலனும் இல்லை என்பதை கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் தற்போது கொரோனாவை குணப்படுத்துவதில் முதன்மையாக கருதப்படும் ரெம்டெசிவிர் சேர்க்கப்படலாம். காரணம் அந்த மருந்து  பயனளிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கூடிய விரைவில் கொரோனா சிகிச்சை முறை பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர்  நீக்கப்படலாம்’’எனக் கூறினார்.

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் காத்துக்கிடந்தனர். மேலும் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போருக்கு இந்த மருந்து உடனடி விடுதலை கொடுப்பதாக கூறி, தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை அதிக விலைக்கு விற்றனர். ஆனால் மருத்துவ நிபுணர்கள் சிலர் இது ஆக்சிஜன் சப்ளை தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே அவசியம் என்றும், நுரையீரல் தொற்று தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கே இது தேவை என்றும் விளக்கமளித்திருந்தனர்.

தற்போது ரெம்டெசிவிர் பயனளிக்கவில்லை  எனக் கூறப்படும் நிலையில் இந்த மருந்தினை அதிக விலை கொடுத்து நோயாளிகள் வாங்க வேண்டாம் என பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த மருந்தால் கொரோனா நோயாளிகளுக்கு எந்தப்பலனும் இல்லை என சுகாதார துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

click me!