கொரோனா காலத்தில் டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களுக்கு NO விருது.. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ரெஸ்ட்ரிக்ஸன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 2:02 PM IST
Highlights

5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எவ்வித புகாருக்கும் இடம்தராமல் கல்விப்பணி ஆற்றிவருவோருக்கு இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள். கொரோனா காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியாற்றவர்கள் ஆவர்.

சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. 

ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான ஆசிரியர் பணியில் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன். ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்து தனது ஆசிரியர் சமூதாயத்திற்கு கௌரவத்தை தேடித்தந்த அவரின் பிறந்த தினமான  செப்டம்பர்-5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில்  சிறந்த கல்வி தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி  நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் என  385 ஆசிரியர்களை தேர்வு செய்து டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அதில், விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்தும் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், மாநில அளவிலான தேர்வுக் குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வழிகாட்டுதல் நெறிமுறையும் அதில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அரசுப்பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் சிறப்பாசிரியர்களும் விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர். 5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எவ்வித புகாருக்கும் இடம்தராமல் கல்விப்பணி ஆற்றிவருவோருக்கு இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள். கொரோனா காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியாற்றவர்கள் ஆவர். என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 14-ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பி வைக்க முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 
 

click me!