நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றி - பீகார் சட்டமன்றத்தில் மீண்டும் மாற்றம்

First Published Jul 28, 2017, 1:22 PM IST
Highlights
Nitish Kumar victory in confidence vote


பீகாரில் அரசியலின் பரபரப்பான சூழல்நிலையில், சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் 131 எம்.எல்.ஏ.க்களின்ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.

இதையடுத்து, பீகார் மாநிலத்தில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாகட்சியின் கூட்டணி ஆட்சி உதயமானது.

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்துநிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் ஆட்சி அமைத்தது.லாலு பிரசாத் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ஓட்டல் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக  இம்மாத தொடக்கத்தில் லாலு வீடுகள், உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தினர். இது தொடர்பாக துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீது எப்.ஐ.ஆர்.ரை சி.பி.ஐ. பதிவு செய்தது.

இதையடுத்து, தேஜஸ்வி பதவி விலகக் கோரிக்கை எழுந்தது, ஆனால், பதவி விலக மறுத்ததைத் தொடர்ந்து, நிதிஷ்குமார் கடந்த இரு நாட்களுக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்த சிலமணி நேரத்தில் பா.ஜனதா கட்சி நிதிஷ் குமாருக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து, முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக சுஷில்குமார்மோடியும் நேற்று முன் தினம் பதவி ஏற்றனர்.

சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் திரிபாதி உத்தரவிட்டநிலையில், நேற்று சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு எம்.எல்.ஏ.க்கள்அனைவரும் கண்டிப்பாக வர கட்சிகள் சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று சட்டசபை கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. சபாநாயகர் விஜய் குமார் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சுஷில் குமார் மோடி ஆகியோர் மேலவை உறுப்பினர்கள் என்பதால் அவர்களும் கலந்து கொள்ளவில்லை.

நம்பிக்ைக ஒட்டெடுப்பு தொடங்கியவுடன், நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஒருபுறம் வந்து கையொப்பமிட்டனர். எதிர்ப்பவர்கள் ஒருபுறம் சென்று கையொப்பம் இட்டனர்.

அதன்பின் முடிவுகளை சபாநாயகர் அறிவித்தார். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு 131 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ்,ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு 108 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதில் ஐக்கிய ஜனதாதளம் 70, பா.ஜனதா 52 , எச்.ஏ.எம்.1, ஆர்.எல்.எஸ்.பி.2, எல்.ஜே.பி.2, சுயேட்சை 4 ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் 26, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 , சி.பி.ஐ. எம்.எல். 3 என 108 பேர் ஆதரவு அளித்தனர் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தவே சபாநாயகர் திட்டமிட்டார். ஆனால், அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியதையடுத்து, கையொப்பம் இடும் முறை கொண்டுவரப்பட்டது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. அப்துல் பாரி சித்திக் ரகசிய ஓட்டெடுப்பு ேதவை எனக் கோரினார் ஆனால், அதை சபாநாயகர் நிராகரித்தார். ஒட்டெடுப்பு முடிந்தபின், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

4 எம்.எல்.ஏ. வாக்களிக்கவில்லை

243 உறுப்பனர்கள் கொண்ட சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவில்லை. இதனால், 239 பேர் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர், இதனால், 120 வாக்குகள் இருந்தாலே புதிய ஆட்சி அமைக்கலாம் என்ற சூழல் இருந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு 131 வாக்குகள் கிடைத்தன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. ராஜ் பல்லவ் யாதவ் சிறையில் இருப்பதால் அவர் வரவில்லை. மருத்துவசிகிச்சையில் இருப்பதால், ஆனந்த சங்கர்  பாண்டே என்ற எம்.எல்.ஏ.வும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின்சுதர்சனும் பங்கேற்கவில்லை.

click me!