மாநில அரசுகளை கடனாளிகளாக்கிய நிர்மலா சீதாராமன்: கடவுள் மேல் பழியை போட்டு தப்பிக்க பார்பதா.? CPM கொதிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 29, 2020, 9:56 AM IST
Highlights

நிதிபற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள்ளும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவாலாக்கும்  முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

சரக்கு மற்றும் சேவை வரிகள் மன்றத்தின் கூட்டம் புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிபற்றாக்குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள்ளும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்த தேவைக்கு சுயேச்சையாக வரிவிதிப்பு செய்யும் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டு விட்டது. பேரிடர் நிவாரணத்திற்காக கூட மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசாங்கம் நிதி திரட்ட முடியும். இதனால் மாநில அரசுகள் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை ஏற்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 2017ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்வதற்கான சட்டமும் ஏற்படுத்தப்பட்டது.  ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கைக் கொடுக்க மறுப்பதோடு தற்போது கொரோனா காலத்தில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கு உதவி செய்ய முடியாது என மறுத்துள்ளது. 

ஆனால், 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாநில அரசு ஜிஎஸ்டி பங்கைக்கூட பல மாநிலங்களுக்கு முழுமையாக மத்திய அரசாங்கம் வழங்காத நிலை உள்ளது. 2017-18ம் ஆண்டு மாநில அரசுக்கு வர வேண்டிய ஐஜிஎஸ்டி தொகை ரூபாய் 4000 கோடி இன்று வரையில் மத்திய அரசால் வழங்கப்படவில்லை. இதுதவிர 15வது நிதிக்குழு வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு மொத்தமாக வழங்க பரிந்துரை செய்த தொகை ரூ.74000 கோடி. ஆனால், மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூபாய் 30000 கோடி மட்டுமே. அதாவது தமிழக அரசுக்கு வர வேண்டிய வருவாய் பற்றாக்குறை மானியம் ரூபாய் 4000 கோடியில் ரூபாய் 1600 கோடி மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதையும் கூட மத்திய அரசு இன்றுவரை முழுமையாக கொடுக்கவில்லை. மத்திய அரசின் இந்த போக்கின் காரணமாக மாநில அரசுகள் கடும் நிதி பற்றாக்குறையிலும், சுமையிலும் சிக்கியுள்ளன. தமிழக அரசின் சொந்த வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் இந்த காலத்தில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக மருத்துவ செலவுகள், பொருளாதார உதவிகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அரசுகளே செலவழித்துக் கொண்டிருக்கின்றன. 

இதற்கு போதுமான நிதி இல்லாததால் பல்வேறு மாநில அரசாங்கங்களும் சந்தையில் கடன் வாங்கியிருக்கின்றன. கடன் வாங்கும் அளவை அதிகரிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் ரிசர்வ் வங்கி கடனளிக்கும் என்கிற நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசு திணித்துள்ளது. இதனால் மாநில அரசுகள் அதிக வட்டிக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்கி கொண்டிருக் கிறார்கள். கடைசியாக கிடைத்த தகவலின் படி தமிழக அரசு மட்டும் ரூபாய் 37,500 கோடி வெளிச்சந்தையில் கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு நெருக்கடியில் நின்று கொண்டு கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபடும்போது, மத்திய அரசு ஜிஎஸ்டி நிவாரணத்தொகையை தர முடியாது என கைவிரித்திருப்பது சட்டவிரோதமான செயலாகும். தற்போது இது கடவுளின் செயலால் ஏற்பட்டது என்று நிதியமைச்சர் சொன்னாலும் இந்த ஆண்டு பட்ஜெட் உரையின் போதே நிதியமைச்சர் இதை குறிப்பிட்டிருக்கிறார். எனவே, மாநிலங்களை ஓட்டாண்டிகளாக்கி அன்றாட செலவுகளுக்கே மத்திய அரசிடம் கையேந்த வைக்கும் நிலைக்கே தள்ளுவதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது. 

தற்போது ஜிஎஸ்டி இழப்பீட்டை தர முடியாது ரிசர்வ் வங்கியில் வட்டிக்கு கடன் பெற்றுகொள்ளலாம் என நிதியமைச்சர் கூறியிருப்பது சட்டத்தை மீறிய செயல் மட்டுன்றி மாநில மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். அப்படி ஏதாவது கடன் வாங்க வேண்டுமென்றால் அதை செய்ய வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசுகள் அல்ல. தான் இயற்றிய ஒரு சட்டத்தையே மத்திய அரசு கடவுளின் பெயரை சொல்லி மீறுவது அரசமைப்பு சட்டத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். மத்திய அரசின் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

click me!