எமர்ஜென்சியில் ஆட்சியை கலைச்ச காங்கிரஸுடன் திமுக கூட்டு..திமுகவை கேள்விகளால் துளைத்தெடுத்த நிர்மலா சீதாராமன்!

By Asianet TamilFirst Published Jun 25, 2020, 9:34 PM IST
Highlights

எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மேயர் சிட்டிபாபு துன்புறுத்தல் தாங்க முடியாமல் உயிரிழந்தார். ஆனால், திமுக இன்று காங்கிரசோடு கூட்டணி அமைத்திருக்கிறது. திமுக எந்த விதத்தில் காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி வைத்துள்ளது என ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். 

திமுக எந்த விதத்தில் காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி வைத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக ஆறாம் ஆண்டு சாதனையும் இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற முதலாமாண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். “ஆட்சியின் என்ன சாதித்தோம் என்பதை மக்களிடம் சொல்வது கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அதற்கு தடையாக உள்ளது. ஆனால், இன்று காணொளி காட்சி மூலம் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில்கூட இணையதள வசதி வந்துவிட்டது. அதனால், நம் கருத்தை மக்களிடம் வைக்க முடிகிறது. லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு எனது அஞ்சலி.
45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் காங்கிரஸ் கட்சி தனது பதவி ஆசைக்காக ஜனநாயகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது.  நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது. மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரித்தனர். பதவி மோகம், பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே எமர்ஜென்சியைக் கொண்டுவந்தனர். அந்தக் காலகட்டத்தில், பல அராஜகங்களை நிகழ்த்தி எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்தனர். ஆனால், அதே காங்கிரஸ், இன்று ஜனநாயகம் குறித்து பேசுவது வேதனையாக உள்ளது.


தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சியை சட்டத்துக்கு விரோதமாக பதவியில் இருந்து நீக்கியது காங்கிரஸ். அக்கட்சியை சேர்ந்தவர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்து பல கொடுமைகளை செய்தனர். எதிர்க்கட்சியினருக்கு பலவித தொந்தரவுகளையும் கொடுத்தனர். ஆனால், இன்று காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து திமுக பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது.
எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மேயர் சிட்டிபாபு துன்புறுத்தல் தாங்க முடியாமல் உயிரிழந்தார். ஆனால், திமுக இன்று காங்கிரசோடு கூட்டணி அமைத்திருக்கிறது. திமுக எந்த விதத்தில் காங்கிரசோடு சேர்ந்து கூட்டணி வைத்துள்ளது என ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். அடிமை தொண்டர்கள் உள்ள காங்கிரஸ் உடன் சேர்ந்த எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு பேச்சுரிமை, ஜனநாயகம் குறித்து கேள்வி கேட்க என்ன உரிமை உள்ளது?” என்று காட்டமாக நிர்மலா சீதாராமன் பேசினார்.

click me!