
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சசிகலா அணியின் நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு பிரச்சார பேச்சாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், நடிகைகள் என அனைவரும் வந்தனர். குழுவாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அங்கு நடிகை சி.ஆர்.சரஸ்வதியும், பேச்சாளர் நிர்மலா பெரியசாமியும் பேசிக்கொண்டிருந்தனர்.
நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் நல்ல மனிதர்தான். அவருடன், பேசி பார்க்கலாம். அவரை தேவையில்லாமல் திட்டக் கூடாது என சி.ஆர்.சரஸ்வதியிடம் கூறினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒருமையில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமியை கடிந்து கொண்டார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.இதனால், கட்சியின் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவின் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சீட்டு கேட்டதால், சன் டிவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்தான் நிர்மலா பெரியசாமி.
பின்னர், கொங்கு கட்சியில் சேர்ந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். அங்கும் போனியாகவில்லை நிர்மலா பெரியசாமியின் கணக்குகள். நீண்டகால அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போயிருந்த இவர், தொடர்ந்து அதிமுகவில் சேர முயற்சி செய்து வந்தவர்.
சக செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபுவின், கடும் எதிர்ப்பால், அதிமுகவில் கால் வைக்க முடியாமல் திணறி வந்தார். ஒரு வழியாக அடித்து பிடித்து, கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் 2015ம் ஆண்டு இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த பின்னரும், ஒன்றும் போனியகவில்லை நிர்மலா பெரியசாமிக்கு. கடந்த ஒரு வருட காலத்துக்குள் தான், கட்சியின் பேச்சாளர் பொறுப்பும், வெளியில் பேசும் அனுமதியும் கொடுக்கப்பட்டது.
ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து பிரிநத உடனே, அவருடன் சென்றுவிடுவது என முடிவெடுத்து இருந்தார் நிர்மலா பெரியசாமி. ஆனால், தனக்கு அரசியல் எதிரிகள் அங்கு சென்றுவிட்டதால், பல்லை கடித்து கொண்டு சசிகலா உடனே இருந்தார்.
தொடர்ந்து மதில் மேல் பூனையாக இருந்த நிர்மலா பெரியசாமி, அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு உள்ளாகவே அரைவேக்காட்டு தனமாக பேசி இருக்கிறார்.
தற்போது தினகரனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும், ஓ.பி.எஸை மக்கள் செல்வாக்கு உள்ளவர் என வாழ்த்தியும் பேசி இருக்கிறார். இதனால், கடுப்பாகி போன சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் பச்சை பச்சையாக திட்டியுள்ளனர்.
அதிர்ந்துபோன நிர்மலா பெரியசாமி, பதிலுக்கு பதில் மல்லு கட்டியிருக்கிறார். இதை பார்த்த முன்னாள் அமைச்சர் வளாமதி, உன் வேலைகளை வெளியே வைத்து கொள். இல்லாவிட்டால், கட்சி பதவியை ராஜினாமா செய் என பிடித்து ஏறி இருக்கிறார்.
இதனால், கடுப்பாகி போன நிர்மலா பெரியசாமி, நொந்துபோய் அறையைவிட்டு வெளியே வந்துவிட்டாராம்.
வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் நல்லவர் வல்லவர் என புகழ்ந்து சென்றுவிட்டுக்கிறார்.
எனவே, விரைவில் ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி, ஐக்கியமாவார் என கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் அணிக்கு சென்றாலும், அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருக்காது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
நிர்மலா பெரியசாமியிடம் எலியும், பூனையுமாக இருக்கும் பாத்திமா பாபு, ஓ.பி.எஸ். அணியில் ஸ்ட்ராங்காக இருக்கையை பிடித்துவிட்டதுதான் காரணமாம்.
நாவடக்கம் இல்லாததால், தொடர்ந்து அரசியல் எதிர் காலத்தை தொலைத்து வருபவர்களுக்கு ஒரு உதாரணம்தான் இந்த நிர்மலா பெரியசாமி.