
உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாவதால், அதில் தொடர்புடையவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். எந்த நேரத்தில் தங்களை விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியை ஜெனிதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
5-வது நாளாக நிர்மலா தேவியிடம சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் அளித்த தகவல்களின்பேடிரல் அடுத்தடுத்த நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத்துறை தலைவர் நாகராஜன், கல்லூரி அலுவலகர்கள் வரவழைக்கப்பட்டு தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.பி.ஏ பிரிவின் பேராசிரியர் முருகனிடமும் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பசாமியை பிடிக்க தனித்தனி குழுவாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியின்போது, நிர்மலா தேவியுடன் அறையில் தங்கி இருந்த தூத்தக்குடி கல்லூரி
உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலரை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். புத்தாக்க பயிற்சியின்போதுதான், நிர்மலாதேவி
மாணவிகளைத் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிதா தமிழ்மலருக்கு தகவல்கள் எதுவும் தெரியுமா என விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட மற்ற கல்லூரி பேராசிரியைகளும் பதற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.