எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்!! வடமாநிலங்களில் கலவரம்.. துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி

First Published Apr 3, 2018, 10:32 AM IST
Highlights
nine dead in dalit protests in northern states


எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கலவரம் வெடித்ததால், நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிரடிப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களில் அரசு ஊழியர்கள், தனிநபர்களை உடனடியாகக் கைது செய்யக்கூடாது. உரிய விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதாக அமைந்துள்ளதாக தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார் உள்ளிட்ட நாட்டின் வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, பொதுச்சொத்துகளை சூறையாடுதல் என கலவரம் மூண்டது.

வன்முறை கைமீறி போக, அதை முடிவுக்கு கொண்டுவர முதலில் தடியடி நடத்திய போலீசார் பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் கட்டுப்படுத்த முடியாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் மோரினா, குவாலியர், பிண்ட் பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தில் முஷாபர்நகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். அந்த மாநில தலைநகர் ஜெய்ப்பூர் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 

click me!