
அமமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர், ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்தனர். பின்னர், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். சசிகலாவை பொதுச்செயலாளராகக் கொண்ட அமமுகவை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அதிமுகவைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அவர் அணியில் சேர்ந்தனர். இதனையடுத்து, இந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலர் பல்வேறு கட்சிகளில் இணைந்தனர்.
இந்நிலையில், சேலத்தில் 2 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். நிலக்கோட்டை தங்கதுரை, பரமக்குடி முத்தையா இருவரும் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்தனர். இருவருக்கும் சால்வை அணிவித்து, அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை முதல்வர் வழங்கினார்.