தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டப்படுகிறதா ? நான்கு மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை !!

By Selvanayagam PFirst Published Jul 20, 2019, 11:17 AM IST
Highlights

தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை கிடைக்காததால் இலங்கை சென்று கொழும்பில் கை வரிசை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும்  இலங்கையில் உள்ள ஐ.எஸ். ஆதரவு நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்கள் உதவிகள் செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 2 மாதங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்த தகவல்களில் சென்னையில் உள்ள சிலர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அன்சருல்லா அமைப்பைச்சேர்ந்த 14 பேர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  நெல்லை மேலப்பாளையத்தில் முகம்மது இப்ராஹீம் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் மதுரையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

click me!