அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் ? இவரா ? அவரா ? இல்லை இவரா ? மும்முனைப் போட்டி !!

By Selvanayagam PFirst Published Sep 2, 2019, 7:01 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 
 

தமிழக பாஜகவின் தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவர் பதவியில் அவர் இருந்து வந்தார்.  கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பாஜக  தலைவர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகி உள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக யார் வர போகிறார்? என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தமிழசைக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளது ஒரு புறம் பெருமையான விஷயம் என்றாலும், அவரது அரசியல் எதிரிகள், தமிழிசையில் அரசியல் வாழ்வு ஆளுநர் பதவியுடன் முடிந்து விடும் என கொண்டாடி மகிழ்கின்றனர்.

தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிடும்போதே அவருக்கு தோல்வி உறுதி என்று தெரியும். ஆனாலும் ஜனநாயகப் போர்க்களத்தில் தமிழகத்தின் பாஜக தலைவரே களமிறங்காமல் போனால் வேறு யார் இறங்குவார்கள் என்று துணிந்து களமிறங்கினார் தமிழிசை. 

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரிடமும் மிகுந்த நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார் தமிழிசை. அதனால், தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக வட்டாரத்தில் நிலவியது.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக யார் என்ற போட்டி தற்போது அதிகமாகிவிட்டது. இதுவரை இருந்த பாஜக தலைவர்கள் யாரும் இனி வேண்டாம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கருப்பு முருகானந்தம், கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் ,  மதுரை பாஜகவை சேர்ந்த சீனிவாசன் மற்றும் கோவையைச் சேர்ந்த சிபி.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேசிய இளைஞரணித் துணைத் தலைவரும் கோவையைச் சேர்ந்தவருமான ஏ.பி. முருகானந்தம் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்கிறார்கள். அதே நேரத்தில் பொன்,ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரும் களத்தில் நிற்பதாக கூறப்படுகிறது.

click me!