தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம். அதற்கு காரணம் திமுக தான். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று அமித்ஷா கூறினார்.
சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை தவறிவிட்டுள்ளது தமிழகம். அதற்கு காரணம் திமுக தான். வரும் காலத்தில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்காக வைத்து அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!
இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை. அப்போது பேசிய அவர், “வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என பேசியது தமிழகத்திற்கு வரவேண்டிய பெருமை.
கடந்த காலத்தில் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராஜாஜி, காமராஜர், மூப்பனார் ஆகியோருக்கு கிடைக்க வேண்டியது தள்ளிப்போனது. அதற்குக் காரணம் திமுக என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்தார்.
அதிமுக நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பெயர் வைத்தார் எம்ஜிஆர். அதற்கு ஏற்ப மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் பிரதமராக வாய்ப்பு வந்தது. காலத்தின் கட்டாயத்தால் அவை மாறிவிட்டது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வர மாட்டார்களா என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும். 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அதிமுகவின் குறிக்கோள்.
இதையும் படிங்க..இபிஎஸ் & ஓபிஎஸ்சை சந்திக்காத அமித்ஷா.. என்னவா இருக்கும்? அண்ணாமலை கொடுத்த அடடே பதில் !!
தமிழர் பிரதமராக ஆக வேண்டும் என அமித்ஷா கருத்தை வரவேற்கிறோம். நன்றி தெரிவிக்கிறோம். அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவார் என தெரியவில்லை.
அப்படி வரும் பட்சத்தில் அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஜெயலலிதா ஆசி பெற்றவர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளன.
18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் திமுக கூட்டணியில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக, ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் திமுக 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. அப்போது மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது என பட்டியல் சொல்லட்டும்.
பிறகு பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கூறுகிறோம். மாநில சுயாட்சி என மு.க.ஸ்டாலின் பேசுவது கண் துடைப்பு, கல்வித்துறையின் எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் திமுக தான். நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசு. அப்போது கலந்தாய்வை மத்திய அரசுதான் நடத்த வேண்டும்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக தான்.அவர்கள்தான் பொறுப்பு. என்னுடைய தனிப்பட்ட கருத்து மாநில சுயாட்சிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. நீட் தேர்வு கூடாது” என்று பேசினார்.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி