அடுத்த குறி விஜயபாஸ்கரா..? புதுக்கோட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சூசக தகவல்..!

By Asianet TamilFirst Published Aug 10, 2021, 9:49 PM IST
Highlights

கடந்த ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் எல்லாம் 2, 3 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில்தான் மிக அதிகமாக கர்ப்பிணிகளுக்கு அதிக எண்ணிக்கையில், அதாவது 60 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களில் 60 சதவீதம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுதான் இறந்துள்ளனர். இத்தகைய இறப்பைத் தடுக்கவே ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
திமுக அரசு பொறுப்பேற்கும் முன்பே 230 மெட்ரிக் டன் அளவில்தான் ஆக்சிஜன் இருந்தது. தற்போது அது 1,000 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடே இல்லை. கொரோனா மூன்றாம் அலை வரவே கூடாது. ஆனால், அப்படி வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவே உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். 
கடந்த ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் எல்லாம் 2, 3 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்திய நிலையில், மருத்து உபகரணங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பாதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்ததாக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சூசகமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

click me!