‘எக்காரணம் கொண்டும் இதை மட்டும் செய்யவே கூடாது’... பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 11, 2021, 02:39 PM IST
‘எக்காரணம் கொண்டும் இதை மட்டும் செய்யவே கூடாது’... பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள்!

சுருக்கம்

தன்னுடைய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளிகல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். கல்வி மீது தீராத காதல் கொண்ட இறையன்பு, ஏராளமான பட்டங்களை வாங்கி குவித்துள்ளார். அதுமட்டுமின்றி தான் கற்ற கல்வி பிறருக்கும் சென்ற சேர வேண்டும் என்ற நோக்கில் ‘ஐ.ஏ.எஸ்.தேர்வும் அணுகுமுறையும்’,‘படிப்பது சுகமே’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். நாவலாசிரியர், சிறந்த பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். 

சின்ன வயதில் இருந்தே ஏராளமான புத்தகங்களை படித்து தன்னை உருவாக்கிக் கொண்ட இறையன்பு ஐ.ஏ.எஸ். அதன் பின்னர் பல ஆய்வுகளை மேற்கொண்டு, ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய புத்தகங்களை வாங்க வேண்டாம் என பள்ளிகல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நுால்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். 

எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது.

அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்