இந்திராவை அசிங்கப்படுத்தியவரை மாநில தலைவராக்கினார் ராகுல்... கே.எஸ்.அழகிரிக்கு எதிராக வெடிக்கும் கன்னாபின்னா பட்டாசு! பின்னணியில் யார்?

By Vishnu PriyaFirst Published Feb 6, 2019, 12:02 PM IST
Highlights

தன்னைப் பற்றிய இப்படியொரு புகார் டெல்லிக்கு போயிருப்பதை அறிந்து மண்டை காய்ந்துவிட்டாராம் அழகிரி. இந்தப் புகாருக்கு பின்னால் இருப்பவர்கள் ‘இளங்கோவனா அல்லது திருநாவுக்கரசரா?’ என்பதுதான் அழகிரி கோஷ்டியின் மிகப்பெரிய தேடலாக இருக்கிறது.

தமிழக காங்கிரஸின் மாநில தலைவர் பதவியில் கே.எஸ். அழகிரி அமர்ந்து ரெண்டு மூன்று நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் அவரை அந்தப் பதவியில் இருந்து அடித்து தூக்குவதற்கான வேலைகளை தெளிவாக துவக்கிவிட்டது எதிர்கோஷ்டி. 

அந்த பதவியில் கடந்த சில வருடங்களாக இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் தனக்கு முன்பாக இருந்த ஈ.விகே.எஸ். இளங்கோவனைப் போல் ஜனரஞ்சகமாக கட்சியை வழிநடத்தாமல், தன் கோஷ்டிக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து அரசியல் செய்தார் என்று பெரும் குற்றச்சாட்டு இருந்தது. இதனால் இளங்கோவன், குஷ்பூ இருவரும் சத்தியமூர்த்தி பவன் வருவதையே புறக்கணித்தனர். சிதம்பரமெல்லாம் பட்டும் படாமலும் வந்து சென்றார்.

  

திருநாவுக்கரசரை தலைவர் பதவியிலிருந்து தூக்கிவீசுவதையே வாழ்நாள் லட்சியமாக வைத்து செயல்பட் துவங்கினார் இளங்கோவன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் அரசர் மற்றும் இளங்கோவன் இருவருக்கும் இடையிலான மோதல் வெளிப்படையாக வெடித்து உச்சம் பெற்றது. இதை மேலிட பொறுப்பாளர்கள் லைவ்வாக கவனித்து அதிர்ச்சுக்குள்ளாகி ராகுலிடம் ஒப்புவித்தனர். அது போக ‘நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை நான் தான் தலைவர்’ என்று அரசர் பேசிய அசால்ட் டயலாக்கால் ராகுலே அதிர்ந்தார். 

இதனால் உடனடியாக தலைவரை மாற்றியாகவேண்டும் என்று முடிவெடுத்தவர் பல கட்ட அலசல்களுக்கு பிறகு மாஜி எம்.பி.யான கே.எஸ். அழகிரி என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தி உத்தரவிட்டார். மாஜி எம்.எல்.ஏ., எம்.பி. எனும் ப்ரொஃபைலை வைத்திருக்கும் இவர், காங்கிரஸுக்கு எதிராக த.மா.கா. சென்று வந்தவரும் கூட. அழகிரி இந்த பதவியில் அமர்த்தப்பட்டதற்கு இன்னும் எதிர்ப்பு ஆரம்பிக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இதோ அவரது நியமனத்தை எதிர்த்து தொடர்ந்து ஃபேக்ஸ் பறக்க துவங்கிவிட்டது டெல்லிக்கு. அதில் அழகிரி மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை சொல்லி கடுமையாய் விமர்சித்திருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டு இதுதான்....

“கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படிக்கிறப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்துல இருந்து காங்கிரஸை கடுமையாக எதிர்த்தவர். அதை கூட நாம பெருசா எடுத்துக்க வேண்டாம். ஆனால், நம்  காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆணிவேரான இந்திராகாந்தி அம்மையாரையே அசிங்கப்படுத்தியவர் அவர். அதாவது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது இந்த கே.எஸ்.அழகிரி பிரமானந்த ரெட்டி நடத்திய காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்திரா காந்தியின் கைதை பெரும் சந்தோஷத்துடன் கொண்டாடினார் அழகிரி. 

அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. உங்கள் பாட்டியின் கைதை கொண்டாடி, அவரை அவமரியாதை செய்தவருக்கு இப்போது காங்கிரஸ் பேரியக்கத்தில் தமிழகத்துக்கே தலைவர் ஆக்கியிருக்கிறீர்கள்! இது சரிதானா? இந்திராம்மையாரின் ஆன்மா வருந்தாதா?” என்று கேட்டிருக்கிறார்களாம். இந்த புகார் ஃபேக்ஸ் ராகுலின் பார்வைக்கு போன பின் என்ன ரியாக்‌ஷன் ஏற்படுமோ என புரியவில்லை. இதற்குள், தன்னைப் பற்றிய இப்படியொரு புகார் டெல்லிக்கு போயிருப்பதை அறிந்து மண்டை காய்ந்துவிட்டாராம் அழகிரி. இந்தப் புகாருக்கு பின்னால் இருப்பவர்கள் ‘இளங்கோவனா அல்லது திருநாவுக்கரசரா?’ என்பதுதான் அழகிரி கோஷ்டியின் மிகப்பெரிய தேடலாக இருக்கிறது.

click me!