
அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என செயல்படுகின்றனர். இதனால், யார் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவது என போட்டி எழுந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தனர்.
அதே நேரத்தில் சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சியினரும், ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை, எடப்பாடி தரப்பினர் கடத்தி சென்றதாக, ஓ.பி.எஸ். அணியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியார் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டனரா என விசாரிக்க மாவட்ட எஸ்பி முத்தரசிக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், தனியார் ரிசார்ட்டில் தன்னை கடத்தி அடைத்து வைத்திருந்ததாகவும், அங்கிருந்து தப்பி வந்ததாக கூறி, சரவணன் எம்எல்ஏ கூவத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்பி முத்தரசி நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு எந்த பிரிவில் பணி என்பதை குறிப்பிடவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தன்மீது வழக்குப்பதிவு செய்ததால், எஸ்பி முத்தரசியை நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தோஷ் ஹதிமானி இன்று பதவியேற்று கொண்டார். காலை எஸ்பி அலுவலகம் வந்த அவர், அங்கிருந்த முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.