புதிய தலைமைச் செயலக ஊழல் வழக்கு….மீண்டும் தோண்டி எடுத்துள்ள தமிழக அரசு.. பீதியில் திமுக….

By Selvanayagam PFirst Published Sep 28, 2018, 6:45 AM IST
Highlights

சென்னை அண்ணா சாலையில் தற்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வரும் புதிய தலைமைச் செயல கட்டடம் கட்டியதில் ஊழல் நடத்தாக தொடரப்பட்ட வழக்கு லஞ்வ ஒழிப்பித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளாது. திமுக மீதான இந்தப் பழைய வழக்கு மீண்டும் தோண்டி எடுக்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் சட்டசபையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாலும், கடும் இட நெருக்கடி உருவானதாலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஜெர்மனி நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்ததற்கு ஏற்ப புதிய தலைமைச் செயலகம் பசுமைக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. ரூ.425 கோடி செலவில் 80 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பளவில் இந்த தலைமைச் செயலகம் உருவானது. அந்த வளாகத்தின் மத்தியில் திராவிட கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் கோபுரம் ஒன்றையும் கருணாநிதி அமைத்தார்.

2008-ல் தொடங்கப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகள் இரண்டே ஆண்டுகளில் முடிந்தன. இதையடுத்து 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்தார். மார்ச் 16-ந்தேதி அந்த கட்டிடத்தில் சட்டசபை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். புதிய தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி அவர் மீண்டும் சட்டசபையையும் தலைமைச் செயலகத்தையும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

அதோடு புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் கூடுதல் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து 14.9.11 அன்று புதிய தலைமைச் செயலக கட்டிடங்களை மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது அங்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி, முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இது போன்ற விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்றும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

ரகுபதி ஆணையத்துக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “ரகுபதி ஆணையத்துக்கு ரூ.4 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கோர்ட்டு தடை விதித்த 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதி ரகுபதி புதிய தலைமைச் செயலக விசாரணை ஆணைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது, இவ்வழக்கில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உட்பட, பலர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று, கூறப்படுகிறது. இது, தி.மு.க.,வினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 25 ஆம் தேதி  சேலத்தில்நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 'இன்றைக்கு, ஒரு குற்றச்சாட்டை, ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இன்னும், 10 நாட்கள் கழித்து பாருங்கள், என்ன நடக்கிறது என்று' என, பூடகமாக பேசியது குறிப்பிடத்தக்கது. 

click me!