முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட புதிய பெயர்... செயல்-சிந்தனைக்கும் பற்றாக்குறை... அதிரடி விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2021, 2:20 PM IST
Highlights

இலவசங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டி; வறுமையில் தவிக்கும் மக்களை நூறுக்கும் ஐநூறுக்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது தானே திராவிட சித்தாந்தத்தின் மந்திரம்? 

தமிழகத்தில் நிதி நிலைமையை சீர் செய்வதற்காக ஐந்து வல்லுனர்கள் கொண்ட குழு முதல்வருக்கு தேவையான பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்தார். இந்த ஐவர் குழு வழங்கும் ஆலோசனைகளின் படி அரசு பொருளாதார கொள்கைகளை வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’45 நாள் ஆட்சியில் நீட் தேர்வுக்கு குழு, நிதி ஆதாரம் குழு,கொரோனா குழு, இது எல்லாம் போதவில்லை என்று இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று முளைத்துள்ளது. குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே?

அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட கட்டமைப்பு நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளை மேம்படுத்த சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக திமுக அரசு கொண்டுள்ளது.
 
திமுக அரசிற்கு நிதிப்பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. குழுக்கள் மேல் குழுக்கள் மட்டும் போட்டு மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார் குழு முதல்வர்.

 

இலவசங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டி; வறுமையில் தவிக்கும் மக்களை நூறுக்கும் ஐநூறுக்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது தானே திராவிட சித்தாந்தத்தின் மந்திரம்? தமிழர்களின் அறியாமையின் மீதும் இயலாமையின் மீதும் தானே திராவிட பொருளாதார கோட்பாடும் சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 வருடமாக நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?’’ என்று வினவியுள்ளார். 

click me!