
கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திமுக மகளிரணியினர் வெளியிட்டு வரும் சிறப்பு வீடியோ மற்றும் படங்களில் திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் இடம்பெற்றுள்ளது.
இன்று கலைஞர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் அனைவரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி என பலரும் சிறப்பு வீடியோ மற்றும் படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் குறித்து கூறும்போது, “நூற்றாண்டு காணப்போகும் கருணாநிதியின் புகழ், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க அரும்பணியாற்றுவோம்” தெரிவித்துள்ளார். அதுபோல் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்றும். இன்றும். என்றும். எங்கும் கலைஞர்” என தலைப்பிட்டு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் முடிவில் திமுக மகளிரணியின் புதிய சின்னம் இடம்பெற்றுள்ளது. இதுபோல் இன்று வெளியிடப்பட்டுள்ள சிறப்பு படங்களிலும் திமுக மகளிரணியின் புதிய சின்னம் இடம்பெற்று வருகிறது. திமுக கொடியை இரு பெண்கள் பிடித்துள்ளது போல அந்த சின்னம் அமைந்துள்ளது. இந்த சின்னத்தில் ஒளிரும் சூரியன் இடம்பெற்றுள்ளது.