
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக பிரச்சினையால், கடந்த ஒரு மாதமாக டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஏப்ரல் மாதம் முதல் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே தனது பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது. சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டது. அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் உடல் நலம் தேறும் வரை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிதித்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அமைச்சர் ஸ்மிருதி இராணியிடமிருந்த தகவல் ஒலிபரப்புத்துறை, ராஜ்ய வர்த்தன் சிங் ரத்தோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இராணி, ஜவுளித்துறையை மட்டுமே கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.