ஆரம்பமானது ‘அம்மா திமுக’…. - ஈ.வி.கே.எஸ் தம்பி இனியன் சம்பத் தொடங்கினார்

First Published Dec 25, 2016, 11:39 AM IST
Highlights


தமிழகத்தில் "அம்மா திமுக" என்ற புதிய அரசியல் கட்சி நேற்று துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத். இவர் "அம்மா திமுக" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.


தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஈ.வி.கே.சம்பத், திமுகவின் ஆரம்பகாலத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சுலோச்சனா சம்பத், எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட பின், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டங்களில் சுலோச்சனா சம்பத் வாரியத் தலைவர், மகளிர் அணித் தலைவர் உள்பட பல முக்கிய பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்தார். கடந்த 2015 ஜூலை 5ம் தேதி சுலோச்சனா சம்பத் இறந்தார்.

சுலோச்சனா சம்பத்தின் மகன்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இனியன் சம்பத், 1989ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின் மாநில செயலாளராகவும் பதவி வகித்தார். பின்னர் அதில் இருந்து விலகி 2011ம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனது கட்சியை பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து கொண்டு பொதுச்செயலாளராக பதவி வகித்தார். எதிலும் விலைபோகாத இனியன் சம்பத், அங்கிருந்து விலகி கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 5-ஆம் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது தோழியான சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சசிகலாவை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிவதும், அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்தும் போஸ்டர்கள், பேனர்களை வைத்து வருகின்றனர். இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும், சென்னையில் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன் ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில், சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து ஜெ.தீபா பேரவையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது சாவில் நாளுக்கு நாள் பல சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் சிலர் மவுனம் சாதிப்பதை பார்த்து அடிமட்டத் தொண்டர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும், அதிமுக கட்சி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்துக்கிடக்கின்றன. மேலும், அதிமுகவில் முக்கிய பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது அடைமொழியான “அம்மா” என்பதை முன்வைத்து ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தந்தை பெரியாரின் 43வது நினைவு தினமான நேற்று தொடங்கி உள்ளதாக இனியன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈ.வி.கே.எஸ்.இனியன் சம்பத்திடம் கேட்டபோது, ‘தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார். அந்த வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.

இந்த கட்சியின் இதர பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சிக்கான பெயர்ப் பலகையை, தனது வீட்டிலேயே நிறுவியுள்ள இனியன் சம்பத், இதற்கான ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

"அம்மா திமுக" என்ற பெயரை சுருக்கமாக எழுதும்போது, அதிமுக என்றே எழுத முடியும் என்பதால், இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 1989ம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்து இரட்டை புறா, சேவல் என இரண்டு சின்னங்களில் போட்டியிட்டது. இதில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா இருவரும் நேர் எதிராக மோதி கொண்டனர். தற்போது என்ன நிலை ஏற்படும் என்பதை பார்ப்போம் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

click me!